Last Updated:
மகாத்மா காந்தி 20-ம் நூற்றாண்டு மட்டுமல்ல, 21-ம் நூற்றாண்டு மற்றும் அனைத்து நூற்றாண்டுகளுக்குமான தலை சிறந்த தலைவர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
“20-ம் நூற்றாண்டு மட்டுமல்ல, 21-ம் நூற்றாண்டு மற்றும் வரும் அனைத்து நூற்றாண்டுகளுக்குமான தலை சிறந்த தலைவர் தான் மகாத்மா காந்தி” என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சர்வதேச எழுத்தாளரும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வாளருமான லெக்ஸ் பிரிட்மேன் உடனான பாட்காஸ்டில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. அதில் அவர் மகாத்மா காந்தி குறித்து பெருமிதமாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், “மக்களை ஒற்றுமைப்படுத்தவும், அவர்களின் வலிமையை அங்கீகரிக்கவும் மகாத்மா காந்தி விடுத்த அழைப்பு இன்றும் எனக்குள் எதிரொலிக்கிறது.
நான் மேற்கொள்ளும் செயல்களில் சாமானியர்கள் மற்றும் அனைவரின் பங்கும் இருப்பதை முடிந்த அளவுக்கு உறுதி செய்துகொள்வேன். எல்லாவற்றையும் அரசிடம் விட்டுவிடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. சமூக மாற்றத்தின் மீது நான் அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
தேசத்தை விழிப்படையச் செய்தவர் தான் மகாத்மா காந்தி. உண்மையை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு பெரும் கூட்டத்தை திரட்டினார். ஆசிரியர் பணியை சுதந்திர போராட்டத்தின் ஒருபகுதியாக முன்னிறுத்தியவர் காந்தி. நூல் நூற்பவர்கள், துணி நெய்பவர்கள் என எல்லோரிடமும் அவரின் செயல்களை சுதந்திர போராட்டத்தின் வடிவமாக கருத வைத்தவர் காந்தி.
தொழுநோயாளிகளை பராமரித்தவர்களிடம், அவர்களின் சேவை சுதந்திர இந்தியாவை நோக்கிய ஒரு படி என்று கூறினார். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒவ்வொரு பணியையும் முக்கியமாக கருதியவர் காந்தி. சாமானிய மனிதரை கூட சுதந்திர போராட்ட வீரராக மாற்றியவர் அவர்.
காந்தி ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கியதால், ஆங்கிலேயர்களால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. காந்தியின் தண்டி யாத்திரை மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என ஆங்கிலேயர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். 20-ம் நூற்றாண்டு மட்டுமல்ல, 21-ம் நூற்றாண்டு மற்றும் வரும் அனைத்து நூற்றாண்டுகளுக்குமான தலை சிறந்த தலைவர் தான் மகாத்மா காந்தி” என புகழாரம் சூட்டினார்.
March 16, 2025 8:45 PM IST

