Last Updated:
தங்கக் கடத்தல் வழக்கில் அதிகாரிகள் திட்டமிட்டு தன்னைச் சிக்க வைத்ததாக நடிகை ரன்யா ராவ், குற்றம் சாட்டியுள்ளார். அடித்துத் துன்புறுத்தி வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகக் கூறிய குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
விமான நிலையத்தில் இருந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தியதாக நடிகை ரன்யா ராவ் குற்றம் சாட்டியுள்ளார். அதிகாரிகள் தனக்கு அளித்த டார்ச்சர் குறித்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். நடந்தது என்ன?
கன்னட நடிகையான ரன்யா ராவ், விக்ரம் பிரபுவின் “வாகா” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிட்சையமானார். அண்மைக் காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தவர், கடந்த மூன்றாம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு வந்தார். அப்போது, 14 கிலோ தங்கத்தைக் கடத்தியதாக விமான நிலையத்திலேயே வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரிய ரன்யாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கடந்த ஆறாம் தேதியன்று வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநருக்கு நடிகை ரன்யா ராவ், எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், டி.ஆர்.ஐ. அதிகாரிகள் தன்னை விமானத்தில் இருந்து இறங்குவதற்கு முன்பே கைது செய்ததாகத் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை அதிகாரிகள் 10, 15 முறை தனது கன்னத்தில் அறைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ஆவணங்களில் கையெழுத்திட மறுத்ததாகவும், அதனால் உணவு வழங்காமலும், தூங்க விடாமலும் சித்ரவதை செய்ததாகவும் சாடியுள்ளார். அத்துடன், டிஜிபியான தனது தந்தையை இந்த வழக்கில் சிக்க வைத்து விடுவோம் என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். வேறு வழியின்றி 50 முதல் 60 பக்க தட்டச்சு செய்யப்பட்ட தாள்களிலும், 40 பக்கங்கள் கொண்ட வெற்று பேப்பரில் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தங்கக் கடத்தல் வழக்கில் டிஆர்ஐ அதிகாரிகள் திட்டமிட்டு தன்னைச் சிக்க வைத்துள்ளதாகவும் ரன்யா ராவ் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, கன்னம், கண் வீங்கிய நிலையில் ரன்யா ராவின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளின் கைதுக்குப் பின் எடுக்கப்பட்ட போட்டோவா என உறுதிப்படுத்தாத நிலையில், விசாரணையின் போது நடிகை துன்புறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Also Read | தமிழகத்தில் வெப்பநிலையில் மாற்றத்திற்கான வாய்ப்பு எப்படி? – வானிலை மையம் அறிவிப்பு இதோ!
இந்த நிலையில், நடிகை ரன்யா ராவின் தந்தை ராமச்சந்திர ராவ், டிஜிபி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கர்நாடக காவல்துறை வீட்டு வசதி வாரிய பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மறு உத்தரவு வரும் வரை அவரைக் கட்டாய விடுப்பில் அனுப்புமாறு கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கைக் கர்நாடக அரசின் சிறப்பு குழுவும் விசாரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில் அதிகாரிகள் திட்டமிட்டு தன்னைச் சிக்க வைத்ததாக நடிகை ரன்யா ராவ், குற்றம் சாட்டியுள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 16, 2025 2:19 PM IST
டார்ச்சர்.. உணவு, தூக்கமின்றி பரிதவிப்பு? – நடிகை ரன்யா ராவுக்கு டி.ஆர்.ஐ. கஸ்டடியில் நடந்தது என்ன?

