தமிழகத்தின் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைப் பற்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டியிருக்கிறார். அதில்,வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம் என திமுக அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “தமிழ்நாடு முழுவதும், தி.மு.க. அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள்/நபர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த 6-ஆம் தேதி (06.03.2025) அன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அச்சோதனையின் முடிவாக, அமலாக்கத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களைப் பணியமர்த்துதல், இடமாற்றம் செய்தல், வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு, பார் உரிமம் வழங்கும் டெண்டர் ஒதுக்கீடு, கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் பெறப்பட்ட ரூபாய் 10 முதல் 30 வரையிலான கூடுதல் தொகை. டிஸ்டில்லரீஸ் மற்றும் பாட்டிலிங் கம்பெனிகள் மூலம் நடந்த முறைகேடுகளைப் பற்றிப் பெரிய பட்டியலே அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.
