தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.
தமிழக தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகப் பேசிவருகின்றனர்.
இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் ஆவணத்தில் இந்திய ரூபாய்க்கான ₹ குறியீட்டுக்கு பதில், ரூ எனத் தமிழ் எழுத்து பயன்படுத்தப்பட்டிருந்தது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதிவில், “நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான “₹’ ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது.
திமுகவிற்கு உண்மையிலேயே ‘₹’ உடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோது, இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
‘₹’ – இந்தச் சின்னத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ என். தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.
மேலும், ரூபாய் என்ற வார்த்தை ‘வெள்ளியால் செய்யப்பட்ட’ அல்லது ‘வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்’ என்று பொருள்படும் ‘ருப்யா’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, ‘ரூபாய்’ என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது.
