ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் கனவுத் திட்டமான வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையம், குஜராத்தின் ஜாம்நகரில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மையத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்து மீட்கப்பட்ட இரண்டாயிரம் வகையான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அழிந்து வரும் நிலையில் இருந்த ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட விலங்குகள் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வந்தாரா விலங்குகள் பராமரிப்பு மையத்தில் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்.
அவரை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, அவர்களது இளைய மகன் அனந்த் அம்பானி உள்ளிட்டோர் வரவேற்றனர். வந்தாரா மையத்தில் உள்ள கல்வெட்டை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் உயிரினங்களை பார்வையிட்டார். அப்போது, ஆசிய வகை சிங்கக் குட்டிகள் மற்றும் வெள்ளை நிற சிங்க குட்டிக்கு பால் புட்டி மூலம் பிரதமர் மோடி பாலூட்டி மகிழ்ந்தார்.
பிராணி மித்ரா விருது
வந்தாராவின் சிறந்த முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, ‘கார்ப்பரேட்’ பிரிவின் கீழ், விலங்கு நலனில் இந்தியாவின் மிக உயர்ந்த கௌரவமான ‘ பிராணி மித்ரா ‘ தேசிய விருதை வந்தாரா நிறுவனம் பெற்றுள்ளது. இந்திய அரசால் வழங்கப்படும் இந்த விருதை , வந்தாராவின் தலைமை நிர்வாக அதிகாரி விவான் கரணி ஏற்றுக்கொண்டார். அப்போது இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் வந்தாராவின் அர்ப்பணிப்பை அவர் எடுத்துரைத்தார்.
சர்வதேச பார்ட்னர்ஷிப்
இந்தியாவில் அதன் பணிகளுக்கு அப்பால், வந்தாரா உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் பார்ட்னர்ஷிப்களை உருவாக்கியுள்ளது. ஒரு முக்கிய உதாரணம், அழிந்துபோன காட்டு ஸ்பிக்ஸின் மக்காவை பிரேசிலில் உள்ள அதன் பூர்வீக வாழ்விடத்திற்கு மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக ACTP சர்வதேச அமைப்புடன் இணைந்து செயல்பட்டது. வந்தாராவின் துணை நிறுவனமான கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (GZRRC), இந்த பணியை முன்னெடுத்து வருகிறது.
இதற்காக ACTP இன் நிறுவனர் மார்ட்டின் குத், வந்தாராவின் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார். வந்தாராவின் நிதி உதவி, நிபுணத்துவம் மற்றும் பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையின் தாக்கத்தை வலியுறுத்தினார். பல்லுயிர் மறுசீரமைப்பு மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கான வந்தாராவின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார்.
இதையும் படிங்க – வனவிலங்கு மறுவாழ்வு மையம் “வந்தாரா”வை திறந்து வைத்த பிரதமர் மோடி!
மற்ற உலகளாவிய பணிகள்
சிறைபிடிக்கப்பட்ட காண்டாமிருகங்களை மீட்டு பராமரித்தல், ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையை வலுப்படுத்துதல் மற்றும் இந்திய காடுகளுக்கு சிறுத்தைகள் திரும்புவதை எளிதாக்குதல் உள்ளிட்ட பல முயற்சிகளை வந்தாரா மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற பணிகளால் வனவிலங்கு பாதுகாப்பில் உலகளாவிய முன்னணி அமைப்பாக வந்தாரா மாறி வருகிறது.
March 04, 2025 4:39 PM IST
