தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதாவரை பணியில் சேர்க்க தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி மின்வாரிய தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், “தமிழகத்தைச் சேர்ந்தவர் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறாத சூழலில் எவ்வாறு பணி நீட்டிப்பு செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், தேனி மின் பகிர்மான வட்டத்தில் இளநிலை உதவியாளராக 2018 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவர் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட பள்ளியில் படித்தவர். தமிழ் வழியில் கல்வி பயிலாததால், பணியில் சேர்ந்து 2 ஆண்டிற்குள் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தமிழ் மொழித்தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் அவரை பணிலிருந்து விடுவித்து கண்காணிப்பு பொறியாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி ஜெயகுமார் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் அலுவல் மொழி தமிழ், அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில்தான் நடைபெறுகிறது. மின்வாரியத்திலும் அப்படியே. இதனால் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற மின்வாரியத்தின் நடவடிக்கை தவறல்ல. இருந்தபோதும் மனுதாரர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பதால் மீண்டும் தமிழ் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மீண்டும் வழங்கப்பட்ட வாய்ப்பிலும் வெற்றி பெறாததால் அவரை பணி நீக்கம் செய்து மின் வாரிய பொறியாளர் உத்தரவு பிறப்பித்தார்.
