புதுச்சேரி 15-வது சட்டசபையின் 6-வது பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் இன்று துவங்கியது. திருக்குறளுடன் துவங்கிய அவர், ஆளுநர் உரை முழுவதையும் தமிழில் வாசித்தார். அப்போது, “அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளையும் பார்வையிட்டேன்.
அப்போது, முதல்வர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பான பணிகளை செய்திருந்தனர். அதற்காக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும்தான் மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகச்சிறப்பான சமூக நலத்திட்டங்கள் மூலம் பயன்பெறுகிறார்கள்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவை ஏற்படுத்திய ஃபெங்கல் புயல், மிக மோசமான பேரழிவுகளையும் ஏற்படுத்தியது. சாதாரண மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்தது. புதுச்சேரி மக்களின் சிரமங்களை போக்கும் விதமாக ரேஷன் கார்டுகள் வைத்திருந்த அனைவருக்கும் ரூ.5,000/- வீதம் ரூ.177.22/- கோடி நிவாரணத்தை அரசு சரியான நேரத்தில் வழங்கியது.
அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30,000/- வீதம், 8,678 ஹெக்டேர்களுக்கு ரூ. 24.11 கோடி வழங்கப்பட்டது. இது நம் நாட்டிலேயே விரைவாக வழங்கப்பட்ட நிவாரணம். 2024-25 ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடான ரூ.12,700 கோடியை விட, ரூ.535/- கோடி கூடுதல் தொகையுடன் திருத்திய மதிப்பீடு ரூ.13,235/- என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
