வாக்காளர் பட்டியல் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது,
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றுதான் வலியுறுத்துகின்றனர்.
முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சௌகதா ராய் பேசுகையில், மேற்கு வங்கம் மற்றும் வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் உள்ளதாக அவர் சுட்டுக்காட்டினார். அடுத்தாண்டு மேற்கு வங்கம் மற்றும் அசாமில் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல்கள் முழுமையாகத் திருத்தப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல்களில் தவறுகள் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதைக் குறித்துத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.