தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டி, ஹுடா என்க்ளேவில் ஃபால்கன் ப்ரொடெக்ஷன் ஃபோர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் அமர்தீப் குமார் என்பவர் துவக்கி நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் ‘ஃபால்கன் இன்வாய்ஸ் டிஸ்கவுண்ட்’ எனும் கவர்ச்சிகர திட்டத்தை தொடங்கி முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாக அமிர்தீப் குமார் விளம்பரம் செய்தார். 2020ஆம் ஆண்டில் பிரிட்டானியா, அமேசான், கோத்ரெஜ் மற்றும் பிற பிரபல நிறுவனங்களுடன் குறைந்த விலைக்கு பொருட்களை சப்ளை செய்ய அந்த நிறுவனங்கள் தனக்கு ஒப்புதல் அளித்து இருப்பதாக கூறி அதற்கான போலி ஆவணங்களை தயார் செய்தார் அமர்தீப் குமார்.
பின்னர் இன்வாய்ஸ் டிஸ்கவுண்ட் என்ற பெயரில் மூன்று திட்டங்கள் அறிவித்தனர். அதில் 145 நாள் திட்டத்தில் சேர்ந்தால் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வட்டியும், 90 நாள் திட்டத்தில் சேர்ந்தால் 16 முதல் 18 சதவீதம் வரை வட்டியும், 180 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கால அவகாசம் கொண்ட இன்வாய்ஸ் திட்டத்தில் சேர்ந்தால் 20 சதவீதம் முதல் 21.95 சதவீதம் வரை வட்டியும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்று பால்கன் நிறுவனம் விளம்பரம் செய்தது.
இதற்கான குறைந்தபட்ச முதலீடு ரூ.25 ஆயிரத்தில் துவங்கி திட்டத்திற்கு ஏற்ப ரூ.9 லட்சம் வரை இருந்தது. அதன் அடிப்படையில் 2021 முதல் வைப்புத் தொகையாக முதலீடுகள் சேகரிக்கப்பட்டு வந்தன. முதலில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டி உட்பட முழுத் தொகையும் வழங்கப்பட்டது. இதன் மூலம் பயனடைந்தவர்கள் தங்கள் முதலீடுகளை இரட்டிப்பாக்க தொடங்கினர். இதன் மூலம், நாடு முழுவதும் 6,979 பேரிடமிருந்து ரூ.1,700 கோடி வசூலிக்கப்பட்டது. இதில் ரூ.850 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டது. அதன்பின் முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.
நிறுவனத்தின் இயக்குநர் குழு ரூ.850 கோடியை முதலீட்டாளர்களுக்கு திரும்பத் தராமல் நிறுவனத்தை மூடிவிட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் அளித்த புகாரின் அடிப்படையில், சைபராபாத் பொருளாதார குற்றப் பிரிவு கடந்த மாதம் 15 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. ஆனால் அதற்கு முன்பே பால்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யோகேந்தர் மற்றும் உரிமையாளர்களான ஆர்யன் சிங், அமர்தீப் குமார் மற்றும் விவேக் சேத் ஆகியோர் ஜனவரி 22 அன்று துபாய்க்கு தப்பி சென்றுவிட்டனர்.
மோசடி செய்து தப்பிச்சென்ற மூன்று பேரையும் பிடித்து இந்தியாவுக்கு கொண்டுவர சைபராபாத் காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. சைபராபாத் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஐதராபாத் அமலாக்கத்துறை இயக்குனரகமும் ஃபால்கன் நிறுவன நிதி முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் வணிகத் தலைவர் பவன் குமார் ஒடெலா மற்றும் இயக்குனர் காவ்யா நல்லூரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அமர்தீப் குமார், இன்வாய்ஸ் டிஸ்கவுண்ட் என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட முதலீட்டு பணத்தை 22 போலி நிறுவனங்கள் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கொண்டு சென்றார் என்றும் பிப்ரவரி 2024ல் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ‘பிரெஸ்டீஜ் ஜெட்ஸ் இன்க்’ என்ற நிறுவனத்திடமிருந்து ‘Hawker 800A’ என்ற வணிக விமானத்தை $1.6 மில்லியன் (தோராயமாக ரூ. 14 கோடி)க்கு அவர்கள் வாங்கியதும் தெரியவந்தது.
வணிகத் தேவைகள் மற்றும் மருத்துவ ஆம்புலன்ஸ் பயன்பாடு ஆகியவற்றிற்காக மூன்று கோடி ரூபாயை செலவு செய்து அந்தக் குட்டி விமானத்தை அவர்கள் மேம்படுத்தியதும் தெரிய வந்தது. இதன் மூலம் மருத்துவ ஆம்புலன்ஸுக்கு சேவை என்ற பெயரில் ஒரு மணி நேரத்திற்கு 3,000 அமெரிக்க டாலர் முதல் 3,500 அமெரிக்க டாலர் வரை அவர்கள் பயனாளிகளிடமிருந்து வசூலித்து வந்ததும் தெரிய வந்தது. அந்தக் குட்டி விமான ஆம்புலன்ஸ் சேவையை சப்தரிஷி சட்டர்ஜி என்ற நபரால் நடத்தப்பட்டு வருவதும் உறுதி செய்யப்பட்டது.
குட்டி விமான ஆம்புலன்ஸ் சேவை தேவையான பொதுமக்கள் ‘ஐ.சி.ஏ.டி.டி.’ என்ற வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதும் இந்த விமான சேவை டெல்லியில் இருந்தும் துபாயிலிருந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பெருமளவிலான அந்நியச் செலாவணி மோசடியில் அவர்கள் ஈட்டப்பட்டதும் தெரியவந்தது. விசாரணையின் ஒரு பகுதியாக, அமர்தீப் குமாரின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
Also Read | 2 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொலை… சிரியாவில் மீண்டும் பரபரப்பு
இதனையடுத்து 8 இருக்கைகள் கொண்ட இந்த வணிக விமானம், தொழிலதிபர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும், வாடகை அடிப்படையில் விமான ஆம்புலன்சாகவும் பயன்படுத்தப்படுவதை அமலாக்கத்துறை கண்டறிந்தது. அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை அடிப்படையில் இந்திய விமான நிலைய ஆணையம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஃபால்கன் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் விமான சேவை முறைகேடாக நடத்தப்படுவதை தெரிவித்து அந்த விமானம் எங்காவது பறந்தால் உடனடியாக அதை ரேடார் கண்காணிப்பில் கொண்டு வந்து தெரிவிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தச் சூழலில், ஷம்ஷாபாத் விமான நிலைய சுங்கப் புலனாய்வுப் பிரிவு ‘Hawker 800A’ விமானத்தின் நகர்வுகளை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், அமர்தீப் குமாருக்குச் சொந்தமான ‘Hawker 800A’ சார்ட்டர்டு விமானம் இந்த மாதம் 5ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு விமான ஆம்புலன்சாக துபாய்க்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அந்த விமானம் வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அமலாக்கத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், அமலாக்கத் துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழு விமான நிலையத்தை அடைந்து விமானத்தை ஆய்வு செய்து பறிமுதல் செய்துள்ளனர்.
Hyderabad,Hyderabad,Telangana
March 09, 2025 3:14 PM IST
