Last Updated:
Chandrababu Naidu | குடும்ப கட்டுப்பாடு விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி ஆகியோரை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனித்தனியாக சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தொகை எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார். தென் மாநிலங்களில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகவும், உத்தரபிரதேசம், பிகார் மாநிலங்களில் மட்டும் இளையோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.
குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவித்து வந்த தான் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாகவும், மக்கள் தொகை அதிகமாக இருந்தால் தான் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இருக்கும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இதையும் படிங்க : இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உருவெடுக்கும் – பிரதமர் மோடி
மக்களவைத் தொகுதி மறுவரையறையும், மக்கள் தொகை மேலாண்மையும் வெவ்வேறானவை என்று கூறிய சந்திரபாபு நாயுடு, தொகுதி மறுவரையறை தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்யும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
March 06, 2025 10:15 AM IST
“மக்கள் தொகையை அதிகரிக்க மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்” – சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்


