Last Updated:
மனிதர்களைப் போன்று விலங்குகளையும் கனிவுடன் பராமரித்து வரும் ஆனந்த் அம்பானியின் சேவைக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
விலங்குகளுக்கு மறு வாழ்வு வழங்குவதில் சர்வதேச அளவில் ஆனந்த் அம்பானியின் வந்தாரா மையம் பாராட்டை பெற்று வரும் நிலையில், எதற்காக வந்தாரா தொடங்கப்பட்டது என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் கனவுத் திட்டமான வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையம், குஜராத்தின் ஜாம்நகரில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மையத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்து மீட்கப்பட்ட இரண்டாயிரம் வகையான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அழிந்து வரும் நிலையில் இருந்த ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட விலங்குகள் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வந்தாரா விலங்குகள் பராமரிப்பு மையத்தில் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்.
அவரை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, அவர்களது இளைய மகன் அனந்த் அம்பானி உள்ளிட்டோர் வரவேற்றனர். வந்தாரா மையத்தில் உள்ள கல்வெட்டை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் உயிரினங்களை பார்வையிட்டார். அப்போது, ஆசிய வகை சிங்கக் குட்டிகள் மற்றும் வெள்ளை நிற சிங்க குட்டிக்கு பால் புட்டி மூலம் பிரதமர் மோடி பாலூட்டி மகிழ்ந்தார்.
வந்தாராவை பார்வையிட்ட பின்னர் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவுகள் வைரலாகி வருகிறது. இதனால் வந்தாரா சர்வதேச அளவில் மேலும் கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையே வந்தாராவை எதற்காக தொடங்கினோம் என்பது குறித்து அதனை நிர்வகித்து வரும் ஆனந்த் அம்பானி விளக்கம் அளித்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது-
எனக்கு என்னுடைய அம்மா எப்போது சிறந்த இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். எனக்கு 12 வயதாக இருக்கும்போது ஜெய்ப்பூரில் இருந்து ரன்தம்போருக்கு சாலை மார்க்கமாக செல்வோம். அப்போது நான் யானை குட்டிகளை பார்ப்பேன். கொளுத்தும் வெயிலில் யானைகள் தள்ளாடி நடந்து செல்லும்.
அப்போது நான் அம்மாவிடம் அதனை மீட்டு பராமரிக்க வேண்டும் என்று கூறினேன். அதுதான் நாங்கள் பராமரித்த முதல் யானை. அப்போது எங்களுக்கு எப்படி யானைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியாது. யானைகளுக்கு எப்படி உணவு அளிக்க வேண்டும் என்றும் தெரியாது. அதன்பின்னர் சிறிது சிறிதாக சுமார் 10 ஆண்டுகளில் வந்தாரா வளர்ச்சி அடைந்தது. இப்போது எங்களிடம் தொழில் முறையாக விலங்குகளை பராமரிக்கும் சுமார் 400 நிபுணர்கள் உள்ளனர். சிறந்த முறையில் இப்போது யானைகளை பராமரிக்கிறோம்.
விலங்குகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்து வந்தது. மனிதர்களின் நலனுக்காக ஏராளமானோர் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் விலங்குகளை கவனிப்பதற்கு ஆட்கள் குறைவாக உள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த பாக்கியம் கடவுளின் ஆசியால் கிடைத்துள்ளது. அதனால்தான் நான் விலங்குகளுக்கு சேவை செய்கிறேன். இன்று கடவுளை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் ஒவ்வொரு விலங்குகளிடமும் நான் கடவுளை பார்க்கிறேன். நம் தர்மத்தில் விலங்குகள் உள்ளன. என்று தெரிவித்தார்.
மனிதர்களைப் போன்று விலங்குகளையும் கனிவுடன் பராமரித்து வரும் ஆனந்த் அம்பானியின் சேவைக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன
March 04, 2025 8:38 PM IST

