Last Updated:
Mahakumbh Mela | 144 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற மகா கும்பமேளா பிரயாக்ராஜில் இன்றுடன் நிறைவு. 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
144 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றுவரும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாளில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராட பிரயாக்ராஜ் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளாவில் இந்தியா மட்டுமன்றி, உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, புனித நீராடினர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகள், பல்துறை வல்லுநர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என ஏராளமான விவிஐபிக்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மகா சிவராத்திரியான இன்றுடன் மகா கும்பமேளா நிறைவு பெறும் நிலையில், இறுதி நாளில் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் கூடியுள்ளனர். இறுதி நாளில் மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. பரத்வாஜ், நாக்வாசுகி, காளி, ராம், ஹனுமன் உள்ளிட்ட படித்துறைகளில் மக்கள் புனித நீராட போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Also Read | டெல்லி சட்டமன்றத்தில் அமளி.. அதிஷி உட்பட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
திரிவேணி சங்கமத்தைச் சுற்றியுள்ள 12 கிலோ மீட்டரில் உள்ள அனைத்து படித்துறைகளும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தனது கணவர் ஆனந்த் பிரமாலுடன் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நேற்று புனித நீராடினார். நேற்று மட்டும் திரிவேணி சங்கமத்தில் ஒரு கோடியே 24 லட்சம் பேர் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்த மகா கும்பமேளா, 2,169-ஆம் ஆண்டு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
February 26, 2025 7:00 AM IST
Mahakumbh Mela | 144 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு.. இதுவரை 62 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

