புதுதில்லி: உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மாருதி சுசூகி இந்தியா, ஹரியாணாவில் உள்ள கார்கோடா ஆலையில் தனது வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
இந்த வசதிக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2022ல் தொடங்கி வைத்தார். தொடக்கத்தில், கார்கோடா ஆலை ஆண்டுக்கு 2,50,000 யூனிட் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகவும், அதில் காம்பாக்ட் எஸ்யூவி – ஆன பிரெஸ்ஸாவை உற்பத்தி செய்யும் என்றது.
மாருதி சுசூகியின் துணை நிறுவனமான சுசூகி மோட்டார் குஜராத் பிரைவேட் லிமிடெட் உள்பட மாருதி சுசூகி நிறுவனத்தின் மொத்த ஆண்டு உற்பத்தி திறன் 26 லட்சம் யூனிட்களாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், மாருதி சுசூகி இந்தியாவின் தாய் நிறுவனமான சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் ஆஃப் ஜப்பான், இந்தியாவில் தனது சந்தைப் பங்கு சரிந்து வருவதால், வணிக சூழல் மாறிவிட்டது என்றது. வளர்ந்து வரும் மின்சார வாகன பிரிவு காரணமாக அதன் உத்தியை மறுபரிசீலனை செய்து ஒரு புதிய இடைக்காலத் திட்டத்தை அறிவித்தது.
