Last Updated:
அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பாரம்பரிய ஜுமுர் கலைநிகழ்ச்சியை ரசித்தார்.
அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் நடந்த பிரமாண்ட ஜுமுர் பாரம்பரிய கலைநிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
அசாம் மாநிலத்தின் அடையாளமான தேயிலை தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் மிகப் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கவுகாத்தியின் சாருசஜாய் அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடியை அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, வில் அம்பு உள்ளிட்ட பரிசுகளைக் கொடுத்து வரவேற்றார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒரு சமயம் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியும் கலாச்சாரமும் புறக்கணிக்கப்பட்டதாக கூறினார். ஆனால், தற்போது தாமே வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரத்தை பரப்பும் தூதராக மாறிவிட்டதாக கூறினார். தனக்கும் தேயிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
பின்னர், சாதனை முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜூமோய்ர் பினந்தினி நிகழ்ச்சியை பாரம்பரிய மேளம் அடித்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த 9 ஆயிரம் பேர் ஒன்றாக சேர்ந்து கண்கவர் நடனமாடினர். மலை வாழ் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமான ஜுமரை ஒரே நேரத்தில் இத்தனை பேர் ஒன்றாக இணைந்து நடனமாடுவது இதுவே முதன்முறையாகும்.
பார்வையாளர்களை மெய்மறக்க வைத்த கலைநிகழ்ச்சிகள் முடிந்தவுடன், பிரதமர் மோடி எழுந்து நின்று கைகளை தட்டி தனது பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கண்கவர் வான வேடிக்கைகளும் லேசர் ஒளி நடனங்களும், வண்ண வண்ண விளக்குகளின் வர்ணஜாலங்களும் அரங்கேறின. பின்னர் நிகழ்ச்சி முடிந்து சாலை மார்க்கமாக ரோட் ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள், பாஜகவினர் உற்சாக வரவேற்பு தந்தனர். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அசாமின் கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு தான் தலைவணங்குவதாக குறிப்பிட்டார்.
February 25, 2025 11:02 AM IST
அசாமில் 200 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம்.. பிரமாண்ட ஜுமுர் கலைநிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!

