கேரளத்தில் ஆசிரியர் ஒருவர் தனது பணி முடிந்ததும் நேராக வீட்டிற்குச் சென்று ஜீன்ஸ், டீ-சர்ட் அணிந்துகொண்டு சாலையோர கடைக்குச் சென்றுவிடுகிறார். மாலை சிற்றுண்டிக்காக அல்ல; பகுதிநேர வேலைக்காக. அங்கு இரவு முழுவதும் நின்றவாறு உணவுகளைப் பரிமாறி அதன் மூலம் கிடைக்கும் வருவாயின் மூலமே வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகிறார்.
ஜீன்ஸ், டீ-சர்ட் அணிந்தால், தான் ஆசிரியர் என்பது யாருக்கும் தெரியாது என்பதற்காக அவர் நாள்தோறும் இவ்வாறு உடையணிந்து இந்த இரவுப் பணியைச் செய்துவருகிறார்.
பின்னிரவு வரை சாலையோர உணவகத்தில் வேலை செய்துவிட்டு, மறுநாள் காலை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியராக பணிக்குச் சென்றுவிடுகிறார்.
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியரின் நிலைதான் இது.
அவரின் பணி நியமனத்துக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைக்காததால், கடந்த 4 ஆண்டுகளாக ஊதியமே பெறாமல் அப்பள்ளியில் பணியாற்றிவருகிறார். ஆசிரியராகத் தனது நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்படும், ஊதியம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கிறார்.
விழாக் காலங்களில் கடைவீதிகளில் உள்ள துணிக் கடையிலும் பணிபுரிவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த சமயங்களில் அவருக்குத் தெரிந்தவர்கள் கண்ணில் பட்டால், ”இது எனது நண்பரின் கடை; அவரை இறக்கிவிடுவதற்காக நான் இங்கு வந்தேன்” எனப் பொய் கூறி மறைந்துவிடுவார்.
நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க, சமூகத்தில் இருந்து மறைந்து வாழ வேண்டியுள்ளது என்பதுதான் இதில் மிகவும் மோசமானது என அவர் குறிப்பிடுகிறார்.
பணியிடத்தில் ஆசிரியர்கள் ஒன்றாகச் சேர்ந்து வெளியே செல்லத் திட்டமிட்டால், ‘திருமண நிகழ்வுக்குச் செல்ல வேண்டும்; குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ எனப் பொய் கூறி விலகிவிடுகிறார். இதேபோன்று ஆசிரியர்கள் ஒன்றாக வெளியே சென்று சாப்பிடத் திட்டமிட்டாலும் ‘வயிறு சரியில்லை; ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டேன் எனப் பசியுடன் பொய் கூற வேண்டியுள்ளது; இதைத்தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்’ என வருத்தத்துடன் கூறுகிறார்.
’’பள்ளிக்கூடம் செல்ல பேருந்து கட்டணத்துக்கான சில்லறை கூட என்னிடம் இருக்காது; ரிக்ஷாவில் செல்ல யாராவது மேலும் இரு நபர்கள் வரமாட்டார்களா? எனக் காத்திருந்து புறப்படுவேன். சில நேரங்களில் நான் நம்பிக்கை இழந்து உடைந்து அழுவேன். அந்த நேரங்களில் எல்லாம் என்னைத் தேற்றி அனுப்புவது என் குடும்பத்தைப் பற்றிய எண்ணம் மட்டும்தான்’’ என்கிறார் ஆசிரியர்.
