அதேபோல உக்ரைன்தான் போரைத் தொடங்கியது என்ற ட்ரம்ப்பின் கூற்றும் உண்மைக்குப் புறம்பானதாக உள்ளது. ரஷ்யா தான் முதலில் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 20 சதவீத உக்ரைன் பகுதிகளை அது இதுவரை கைப்பற்றியுள்ளது.
இது இப்படியிருக்க, ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம் சாத்தியமானால் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, உக்ரைனில் உள்ள அரிய மற்றும் முக்கியமான தாதுக்களை அணுகுவதற்கு அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.
உக்ரைனில் டைட்டானியம், லித்தியம், கிராஃபைட் மற்றும் யுரேனியம் தாதுக்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் உட்பட 109 குறிப்பிடத்தக்க கனிம வைப்புக்கள் இருப்பதற்கான ஆதாரங்களையும் உக்ரைன் அரசு வெளியிட்டது.
உயர் ரக ஆயுத அமைப்புகள் முதல் மின்சார வாகனங்கள், சுத்தமான எரிசக்தி தீர்வுகள், மின்னணு சாதனங்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான கனிம வளங்கள் உக்ரைனில் உள்ளன. இவற்றை பிரித்தெடுப்பதும் கடினம். இதனால் அவை மதிப்புமிக்கதாக கருதப்படுகின்றன. அமெரிக்காவும், மற்ற மேற்கத்திய நாடுகளுக்கும் அவற்றை குறிவைப்பதற்கான முக்கிய காரணம், சீனாவிடமும் அவை பரவலாக உள்ளன என்பதுதான். ட்ரம்ப் க்ரீன்லாந்து மீது ஒரு கண் வைத்திருப்பதற்கும் கனிம வளங்களும் ஒரு காரணமாகும்.
ஆனால், ரஷ்யா பக்கம் ட்ரம்ப்பின் இந்த திடீர் சாய்வுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது உக்ரைனுக்கு ஆதரவாக பல கருத்துகளை வெளியிட்டது மட்டுமின்றி தான் ஆட்சிக்கு வந்தபிறகு ஒரே நாளில் தன்னால் போரை நிறுத்திவிட முடியும் என்று உறுதி அளித்தார் ட்ரம்ப்.
