இந்த திட்டத்தில் கையெழுத்துப் போட்டால்தான் ரூ.2,000 கோடி கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் ரூ.10,000 கோடி கிடைக்கும் என்றாலும் நாங்கள் கையெழுத்து போட மாட்டோம். ரூ.2,000 கோடிக்கு கையெழுத்து போட்டால் என்ன ஆகும் ? நமது தமிழ்ச் சமூகம் 2,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும். அந்தப் பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒருபோதும் செய்ய மாட்டான். உங்கள் குழந்தைகளின் படிப்பு வளர வேண்டுமா அல்லது, மூன்றாவது மொழி திணிக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்பிலும் படிப்பு தடைப்பட வேண்டுமா ? எந்த மொழிக்கும் நாம் எதிரியில்லை. இந்தி மொழிக்கும் நாம் எதிரியில்லை. இந்தி மொழி படிக்க நினைப்பவர்கள் இந்தி பிரசார சபாவிலோ அல்லது கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கோ சென்று படிப்பதை ஒருபோதும் தடுக்கவில்லை.
தடுக்கப்போவதும் இல்லை. ஆனால் இந்தியைத் திணிக்க நினைத்தால், `தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவருக்கோர் குணமுண்டு” என்பதைத் தமிழ்நாடு காட்டிவிடும். இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு மாணவர்களின் திறமை எந்த அளவுக்கு இருக்கிறது என்று, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளும்போது தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஒன்றிய கல்வியமைச்சர் கேட்கிறார். அவருக்குக் காரணத்தை நான் சொல்கிறேன். இது தமிழ்நாடு. தமிழை எங்கள் உயிரைவிட மேலாக மதிக்கின்றவர்கள் நாங்கள்.
