முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொடியேற்றுவிழா ஒன்றில் இன்று கலந்துகொண்டார். நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் சுனில் தலைமையில் முன்னாள் பிரதமர் வாய்பாய் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு நடந்த அந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கோபகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
`முதலமைச்சர் பத்திரிகைகளை படிக்க வேண்டும்’
பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் நடக்கும் குற்றச்செயல்கள் மீதி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது அரசு. மாநிலத்தில் நடக்கும் குற்றச்செயல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தினமும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு தீர்வு என்ன? அனைத்தையும் சமாளித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு அதை டைவர்ட் செய்து விடுகிறார்கள். தொடர்ந்து நடந்து கொண்டிருக்க கூடிய பாலியல் குற்றங்கள், திருப்பூர் உள்ளிட்ட மாநிலங்கள் நடக்கக்கூடிய நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம்.
செய்தித்தாள்களை பார்த்தால் நல்லவிஷயங்களை விட போதை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற விஷயங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழக முதலமைச்சர் இந்த பத்திரிகைகளை எல்லாம் படிக்க வேண்டும். 2026 தேர்தலில் நிச்சயமாக இந்த அரசாங்கம் இருக்காது. இந்த அரசாங்கம் மிகப்பெரிய தோல்வியை அடையும். மக்கள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி கட்சியை பார்த்தால், எல்லா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க வந்துவிடக்கூடாது என்ற ஒற்றை விஷயத்தில் மட்டும்தான் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். மற்றபடி எல்லா விஷயங்களிலும் அவர்களுக்குள் நூற்றுக்கணக்கான கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. அதை சரி செய்யும் வகையில் அவர்களால் செயல்படவும் முடியாது. தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக அவர் நடந்து கொண்டிருக்கிறார்.

பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அந்த துறைகளை சேர்ந்தவர்கள் பள்ளிக்கூடங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த பள்ளிக்கூடங்களில் இந்தி பயிற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால், அவர்கள் விருப்பப்பட்டு வருகிறார்கள் என்கிறார்கள். இந்தி பிரசார சபா இல்லையா என கேட்கிறார்கள். இந்தி படிக்க வேண்டும் என்று வருபவர்களுக்கு மட்டும் இருக்கக்கூடிய அமைப்பு அது. அது மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட அமைப்பு. அது இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இந்தியை பரப்ப வேண்டும் என்று நீங்கள் பள்ளிக்கூடம் ஆரம்பித்தீர்களா. அதை நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள். இந்தியை பரப்புவதற்காக தான் நாங்கள் பள்ளிக்கூடங்களில் தொடங்கி இருக்கிறோம் என்று நீங்கள் சொன்னால் உங்களை ரோடு ரோடாக செருப்பு கழற்றி அடிப்பார்கள். முதலில் உங்கள் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடுங்கள்.
