Last Updated:
சனாதன தர்மம், கங்கை மாதா, இந்தியா அல்லது மகா கும்பமேளா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைப்பதும், போலி காணொளிகளை பகிர்வதும் 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதற்கு சமம் என யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆனந்திபென் படேல் உரையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று உத்தரப்பிரதேசம் சட்டமன்றத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர், “மகா கும்பமேளா அரசு நடத்தும் நிகழ்ச்சி அல்ல. ஒரு சமூகம் நடத்தும் நிகழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ளனர். குறிப்பாக கடந்த தை அமாவாசை அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதேபோல், டெல்லி ரயில் நிலையத்தின் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். இது தவிர சாலை விபத்துகளிலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களது கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் பேசியபோது, “மகா கும்பமேளா மரண கும்பமேளாவாக மாறிவிட்டது. நான் மகா கும்பமேளாவையும், புனித கங்கா மாதாவையும் மதிக்கிறேன். ஆனால், அங்கு சரியான திட்டமிடல் இல்லை” என பேசி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக தங்கள் மாநிலத்தில் இருந்து மகா கும்பமேளாவில் பங்கேற்க சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் பலியானார்கள். அவர்களது உடல் உடற்கூறு ஆய்வுக் கூட செய்யாமல் மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்பட்டது என்றும், நிவாரண நிதியை தவிர்க்கும் வகையில் அவர்களது மரணத்திற்கு மாரடைப்பு காரணம் என்றும் சொல்லப்படுகிறது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையும் படியுங்கள் : “மகா கும்பமேளா அல்ல மரண கும்பமேளா” – ஆவேசமான மம்தா பானர்ஜி
இவரை போலவே பிகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் உள்ளிட்டவர்களும் உத்தரப்பிரதேச அரசை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பேசிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 56.25 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடுகின்றனர். சனாதன தர்மம், கங்கை மாதா, இந்தியா அல்லது மகா கும்பமேளா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைப்பதும், போலி காணொளிகளை பகிர்வதும் 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதற்கு சமம்.
இந்த நிகழ்வு (மகா கும்பமேளா) தனிப்பட்ட ஒரு கட்சியோ அல்லது அரசோ நடத்துவது அல்ல. இது ஒரு சமூகம் நடத்தும் நிகழ்ச்சி. அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற ஒரு வேலைக்காரனாக இருக்கிறது. அந்த வகையில், இந்த நூற்றாண்டின் மகா கும்பத்துடன் இணைந்திருக்கும் வாய்ப்பு நமது அரசுக்குக் கிடைத்திருப்பது நமது அதிர்ஷ்டம்.
#WATCH | Lucknow: In the UP assembly, CM Yogi Adityanath says, “While we are participating in the discussion here, at that time more than 56.25 crore devotees have already taken their holy dip in Prayagraj… When we make any baseless allegations or snow fake videos against… pic.twitter.com/VYNnzPn4w1
— ANI (@ANI) February 19, 2025
மகா கும்பமேளா நிகழ்வு இன்னும் ஏழு நாட்கள் உள்ளன. இன்று பிற்பகல் வரை 56 கோடி பக்தர்கள் புனித நீராடினர். ஜனவரி 29 அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் மற்றும் கும்பமேளாவிற்காக பயணித்த போது சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கும் எங்களது அனுதாபங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் அனுதாபங்கள், அரசு அவர்களுடன் நிற்கிறது, அரசு அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவும்” எனத் தெரிவித்தார்.
February 19, 2025 2:53 PM IST
“மகா கும்பமேளா அரசு நிகழ்ச்சி அல்ல.. அது ஒரு சமூகத்தின் நிகழ்ச்சி” – எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு யோகி ஆதித்யநாத் பதில்

