நேரு, மன்மோகன் சிங், கருணாநிதி, ஸ்டாலின் உள்பட அனைவரையும் விமர்சிக்கும் கார்ட்டூன்களை நாங்கள் வெளியிட்டு வருகிறோம். அமைச்சகத்தின் முடிவு பத்திரிகைக்கு எதிராகச் சென்றால், அதை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம். எங்கள் கார்ட்டூனிஸ்ட் தனது பணியைத் தொடர்ந்து செய்வார்.” என்றார்.
இந்த கார்ட்டூனின் கர்த்தா கார்ட்டூனிஸ்ட் ஹாசிஃப்கான் (42), 2012 முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றிவருகிறார். கார்ட்டூன் வரைந்ததற்காக அரசியல்வாதிகள், அவர்களின் ஆதரவாளர்களிடமிருந்து பல்வேறு மிரட்டல்களை எதிர்கொண்டிருக்கிறார். ஆனால், வலதுசாரிகளிடம் இருந்து அவர் எதிர்கொள்ளும் தற்போதைய மிரட்டல்களும், விமர்சனங்களும் அவரின் மதத்தைக் குறிவைத்திருக்கிறது. சமூக ஊடகங்களில் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய ஹாசிஃப்கான், “தி.மு.க-வை விமர்சிக்கும் கார்ட்டூன் வரைந்தபோதும், ஜெயலலிதாவை விமர்சிக்கும் கார்ட்டூன் வரைந்தபோது இரண்டுக் கட்சி ஆதரவாளர்களும் விமர்சித்திருக்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் மோசமாக விமர்சிக்கின்றனர். அரசியல் விமர்சனமோ, சைபர் ட்ரோலிங் செய்வது கூட பரவாயில்லை. ஆனால் ஒருவரை அவரது மத அடையாளத்தை முன்வைத்துத் தாக்குவதும் அதைவைத்து அவர்களைக் கையாள்வதும் மிகவும் ஆபத்தானது.” என்றார்.
2026-ம் ஆண்டில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ள விகடன் குழுமம், கடந்த காலங்களிலும் இதேபோன்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான சவால்களைச் சந்தித்திருக்கிறது. 1987-ம் ஆண்டில், `ஆனந்த விகடனின்’ அப்போதைய ஆசிரியரான எஸ்.பாலசுப்பிரமணியன், வெளியிட்ட ஒரு கார்ட்டூனுக்காக தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புரிமைக் குழு, அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது.
