நாட்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்து வந்தது. இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு, தேர்வுக் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய உள்துறை அமைச்சரை நியமித்து மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று தேர்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், மனு மீதான விசாரணை முடியும் வரை புதிய தேர்தல் ஆணையர் நியமனத்தை ஒத்திவைக்குமாறு ராகுல் காந்தி எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
இதனை, பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு ஏற்க மறுத்தது. 30 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில், பரிந்துரைக்கப்பட்ட 5 பேரில் ஒருவரை தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேர்வு செய்தனர். இதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போது தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஷ்குமாரை நியமிக்கும் தேர்வுக் குழுவின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
கேரளாவிலிருந்து கடந்த 1988-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்ட ஞானேஷ் குமார், நாடாளுமன்ற விவகாரத் துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா நிர்வகித்து வந்த கூட்டுறவுத் துறையின் செயலாளராகப் பணியாற்றிய பின் ஞானேஷ் குமார் ஓய்வு பெற்றார். வரும் 2029-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வரை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரியானாவிலிருந்து 1989-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்ட விவேக் ஜோஷியை, தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
Also Read | விஜயின் ‘தி கோட்’ படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன? – தயாரிப்பாளர் ஓப்பன் டாக்!
முன்னதாக, தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் அதுவரை தேர்வுக் குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் கோரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு விவகாரத்தில் மோடி அரசு, ஈகோவை கைவிட்டு காங்கிரசின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றார். தேர்வுக் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்குவது என்பது சுதந்திரமாக செயல்பட வேண்டிய குழுவை, அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவதாகவே உணரப்படுவதாகவும், இதில் வெளிப்படைத்தன்மை மட்டுமே தேவை என்றும் அபிஷேக் சிங்வி கூறினார்.
இதற்கிடையே, தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஞானேஷ் குமார் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தனது முறையீட்டை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவசர கதியில் இரண்டாவது முறையாக தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளதாகவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் இந்த நியமனம் இருப்பதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. நீதிபதி சூர்யகாந்த் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 18, 2025 1:52 PM IST
