Last Updated:
புதுடெல்லி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா பயணிகள் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். இதற்கு லாலு பிரசாத், “அர்த்தமற்ற கும்பமேளா” என விமர்சித்துள்ளார்.
மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜுக்கு இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில், இரவு 10 மணியளவில் நடைமேடை 14-ல் புறப்பட தயாராக நின்றிருந்தது. அந்த நேரத்தில் ஏராளமான பயணிகள் 14-ஆவது நடை மேடையில் நின்றிருந்தனர். பயணிகள் காத்திருந்த அந்த நேரத்தில் சுதந்திரா சேனானி விரைவு ரயிலும், புவனேஷ்வர் ராஜ்தானி ரயில்களும் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில் நிலையத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின் காரணமாக ரயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள், பிரயாக்ராஜ் விரைவு ரயிலில் ஏற ஒரே நேரத்தில் முண்டியடித்தனர். இதனால் நடைமேடை 13 மற்றும் 14-ஆம் நடைமேடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ரயில்வே ஊழியர்கள் திணறிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கினர். நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆர்.ஜெ.டி. கட்சியின் மூத்தத் தலைவர் லாலு பிரசாத் “டெல்லி ரயில் நிலைய சம்பவம் மனதை வேதனை அடையச் செய்கிறது. மத்திய அரசின் முறையான ஏற்பாடு இல்லாததே இதற்கு காரணம். இது முழுக்க ரயில்வேயின் தோல்வி. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். கும்பத்திற்கு (கும்பமேளா) எந்த அர்த்தமும் இல்லை… அது அர்த்தமற்றது” என கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், லாலு பிரசாத்தின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிகார் பாஜக செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஷர்மா, “ஆர்.ஜெ.டி. தலைவர்கள் எப்போதும் இந்துக்களையும், அவர்களது உணர்வுகளையும் இழிவுதான் செய்வார்கள். தற்போது மகா கும்ப குறித்து லாலு பிரசாத் தெரிவித்திருக்கும் கருத்து என்பது இந்து மதம் குறித்து அக்கட்சியின் சிந்தனையின் வெளிப்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.
February 16, 2025 5:23 PM IST

