Last Updated:
ஐதராபாத்தில் சிவன் கோயிலில் இறைச்சி கிடந்த விவகாரம் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் சிவன் கோயிலுக்குள் இறைச்சித் துண்டுகள் கிடந்த விவகாரத்தில் வெளியான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தின் தப்பாச்சபுத்ரா பகுதியில் அனுமன் கோயிலுடன் கூடிய சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் சிவலிங்கத்தை சுற்றி புதன்கிழமை காலை இறைச்சித் துண்டுகள் கிடந்தன. இதுபற்றி தகவல் அறிந்து வந்த பொதுமக்களும், பக்தர்களும், யாரோ செய்த சதி எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த செயலை செய்தவர்களை கண்டறிந்து கடும் தண்டனை தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து அந்தப் பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டு, பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதேசமயம், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உடனடியாக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படைகள் தங்களின் விசாரணையை துவக்கி நடத்திவந்தன. அப்போது, சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்து அதன் மூலம் இந்த செயலை செய்தது யார் என அறியலாம் என சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
அப்போது தான் இந்த விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. தனிப்படையினர் ஆராய்ந்த சிசிடிவியில், ஒரு நாய் இறைச்சியை தன் வாயில் கவ்வியபடி செல்கிறது. அந்த இறைச்சியின் சிறு பகுதி கீழே விழு அதனை பூனை எடுத்துக்கொண்டு கோயிலுக்குள் சென்றுள்ளது. அப்படி தான் கோயிலுக்குள் இறைச்சி வந்திருக்கிறது. இதனை சிசிடிவியில் கண்டறிந்த தனிப்படையினர் அந்த வீடியோவை வெளியிட்டனர்.
அதன்பின்னர் கண்ணப்பநாயனார் கதையில் வருவதைப்போல ஒரு பெரிய களேபரத்தை ஏற்படுத்தியது ஒரு பூனை என்பது தெரியவந்ததால் அங்கு நிலவிய அசாதாரண சூழல் இயல்பு நிலைக்கு திரும்பியது. பூனையின் இந்த செயல் கண்ணப்ப நாயனார் கதையை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
February 13, 2025 8:18 PM IST
சிவன் கோயிலில் கிடந்த இறைச்சி துண்டுகள்… சிசிடிவியில் சிக்கிய அந்த உருவம் – இறுதியில் ட்விஸ்ட்!

