இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி அனுராக் தாகூர் நாடாளுமன்றத்தில் இன்று ஜீரோவைக் காண்பித்து ராகுல் காந்தியைக் கேலி செய்திருக்கிறார். தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு, `12,00,000 லட்சத்துக்கு 0 வருமான வரி” என்று குறிப்பிட்டிருந்த சிறிய பதாகையைக் காண்பித்து, “ராகுல் ஜி ஜீரோ பாருங்கள்.” என்று கிண்டல் செய்தார்.
மேலும், தொடர்ந்து ராகுல் காந்தியை விமர்சித்த அனுராக் தாகூர், “பூஜ்ஜியங்களில் யாராவது சாதனை செய்திருந்தால், அது ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிதான். டெல்லி மக்கள் 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் கொடுத்தார்கள்… 2015 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம்… 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம்… 2020 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம்… 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம்… இப்போது, 2025 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம்…” என்று கேட்க, பா.ஜ.க எம்.பி-க்கள் ஜீரோ, ஜீரோ என ஒரேநேரத்தில் சத்தமாகக் கூறினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க-வினரால் பரப்பப்பட்டும் வருகிறது.
