திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுவிற்கு விநியோகிக்கும் நெய்யில் எருமை மாட்டுக்கொழுப்பினை கலந்த விவகாரத்தில் நான்கு பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இவ்விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜூ ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதியில் உள்ள வைஷ்ணவி பால் பண்ணை தலைமை நிர்வாகி அபூர்வா சாவ்டா கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள போலே பாபா பால் நிறுவனத்தைச் சேர்ந்த விபின் ஜெயினும், போமில் ஜெயினும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போலி ஆவணங்கள், முத்திரைகள் மூலம் திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்கான நெய் விநியோக டெண்டரை பெற்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.டெய்ரி பெயரை பயன்படுத்தி, வைஷ்ணவி பால் நிறுவனம், டெண்டர் கோரியது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுக்கான நெய் கலப்பட வழக்கில் 4 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது, சிபிஐ.
