Last Updated:
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார். வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் அவரை விலக வலியுறுத்தினர்.
மணிப்பூர் மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து பிரேன் சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார். குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே 2 ஆண்டுகளாக வன்முறை நீடித்து வரும் நிலையில், தற்போது பிரேன் சிங் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தேய் சமூகத்திற்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே தொடங்கிய வன்முறையில் சுமார் 250க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து வன்முறையைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் பிரேன் சிங் தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரேன் சிங், தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் எல்.சுசீந்திரோவிடம் கொடுத்து அனுப்பினார். அந்த கடிதத்தை முதலமைச்சர் பிரேன் சிங் ஆதரவாளர்கள் கிழித்து வீசினர்.
இதனிடையே மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தில் அம்மாநில முதலமைச்சருக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வெளியான ஆடியோக்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய தடவியல் ஆய்வகத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு இம்பால் திரும்பிய பிரேன் சிங், ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
சுமார் 19 மாதங்களுக்கு பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரேன்சிங்-ன் முடிவுக்குப் பின்னால் பாஜக எம்.எல்.ஏக்கள் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் காரணமாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஆம் ஆத்மி ஆட்சியை இழக்க முக்கிய காரணம்.. 11 தொகுதிகளில் வேட்டுவைத்த காங்கிரஸ்!
மணிப்பூர் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடும் நிலையில், பிரேன் சிங் தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார் பிரேன் சிங்.
இதையடுத்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே பிரேன் சிங்-ன் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அஜய் குமார் பல்லா, மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதலமைச்சர் பதவியில் தொடருமாறு பிரேன் சிங்-ஐ கேட்டுக்கொண்டுள்ளார்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் பட்சத்தில், மாநில சட்டப்பேரவை சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஆளுநர் கட்டுப்பாட்டில் மாநில அரசு இயங்கும் நிலை ஏற்படும்.
February 10, 2025 7:56 AM IST

