ஈரோடு இடைத்தேர்தலில் பெரியாரை இழிவு படுத்தலாம் என்று யார் நினைத்தார்களோ அவர்களின் எண்ணங்களில் மண் விழக்கூடிய அளவிற்கு திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்தும், மோடி அரசை கண்டித்தும் திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த கழக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி முன்னதாக கலைஞர் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக தலைவர் தலைமையில் நடைபெற்று வரும் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை மக்கள் அளித்துள்ளார்கள். எந்த பெரியாரை இழிவு படுத்தலாம் என்று நினைத்தார்களோ அவர்களின் எண்ணங்களில் மண் விழக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றுள்ளது. திமுகவை எதிர்த்தவர்கள் டெபாசிட் கூட பெறவில்லை, இது மாபெரும் மகத்தான வெற்றி.
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து அனைத்து தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றியை குவித்து வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு அசம்பாவித சம்பவங்களை எதிர்க்கட்சியினர் தேர்தல் வியூகங்களாக கையில் எடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுதும் திமுகவிற்கு மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளது என்பது தந்தை பெரியாருக்கு கிடைத்த வெற்றி. தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசுபவர்கள் எவராக இருந்தாலும் அழிந்து போவதற்கு இந்த இடைத்தேர்தல் ஒரு முடிவே சாட்சி.
பெரியாரை வைத்து திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தலாம் என்று 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வியூகம் வகுக்கப்பட்டது. ஆனால் அப்பொழுதும் 184 பகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக சீமானுக்கு அனைத்து விதத்திலும் உதவி செய்தது அனைவரும் அறிந்த ஒன்று. திமுகவையும் தந்தை பெரியாரையும் எதிர்க்க எதிர்க்க திமுக வலுவோடு வளரும்” என்றார்.

ஒரு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது பெரிய விஷயமே கிடையாது. ஆளும் கட்சியினர் இதையெல்லாம் பெருமிதமாக பேசக்கூடாது