மற்றொருபுறம், ‘பாதிக்கப்பட்ட எங்களில் மூன்று பேரை குற்றவாளியாக்குவதா?’ என்று வேங்கைவயலைச் சேர்ந்த மக்கள் ஊரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், ’வேங்கை வயல் தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது‘ எனக் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அதேபோல், இந்த சம்பவம், தொடர்பான வழக்கில், “இதில் குற்றம்சாட்டப்பட்ட மூவருமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், இந்த வழக்கிலிருந்து வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவை நீக்கியிருக்கிறோம். எனவே, இந்த வழக்கை புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும்’ எனக் கோரி சி.பி.சி.ஐ.டி. மனுத்தாக்கல் செய்தது. இரு தரப்பிடமும் தீவிர விசாரணை மேற்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி தரப்பு மனுவை ஏற்று, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டிருக்கிறது.
