எங்கும் நிலவுகிற துயரம்:
நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் என பல்வேறு வகையான கடைகளுக்குள் சென்று பார்த்தோம். பாதிக்கும் மேற்பட்ட கடைகளில் ஊழியர்கள் உட்கார்வதற்கு ஓர் இருக்கைகூட போடப்படவில்லை. கஸ்டமர்களை கவனித்துக்கொண்டிருக்கிற பலரும் நின்றுகொண்டிருக்க, தன்னருகே கஸ்டமர் இல்லாதவர்கள் பொருள்களை எடுத்து வைத்துக்காட்டும் டேபிள் மீது லேசாக சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். சில கடைகளில் நாற்காலிகள் இருந்தாலும், கஸ்டமர்ஸ் வந்துகொண்டே இருக்க, விற்பனைப்பிரிவிலும் பில் போடும் பிரிவிலும் தொடர்ந்து நின்றுகொண்டே தான் இருக்கிறார்கள். இதில் பாலின பேதமெல்லாம் இல்லை. அங்கேயே சிறிது நேரம் உலவியபோது தெரிந்துகொண்ட விஷயம் இது. தி.நகரில் இருக்கின்ற பிரபலமான கடைகளில் ஆரம்பித்து புரசைவாக்கம், சென்ட்ரல் என சென்னையில் இருக்கிற ஷாப்பிங் ஏரியாக்களில் இருக்கின்ற சிறிய கடைகள் வரைக்கும் இதுதான் நிலைமை.
ஏற்படும் ஆரோக்கிய சிக்கல்:
தங்கள் ‘உட்காரும் உரிமை’க்காக குரல் எழுப்பக்கூட நேரமில்லாமல் நின்றுகொண்டே உழைக்கிற அவர்களுக்கு எதிர்காலத்தில் என்னென்ன ஆரோக்கிய பிரச்னைகள் வரும் தெரியுமா? ”படுத்திருக்கும்போது சீராக இருக்கிற நம்முடைய ரத்த ஓட்டம், நின்றிருக்கும்போது புவியீர்ப்புக்கு எதிராகத்தான் செயல்படும். அப்படி செயல்படுவதற்கு கால்களின் தசைகளும் ஒத்துழைக்க வேண்டும். எந்நேரமும் நின்றுகொண்டிருப்பதால் பலவீனமான கால் தசைகளால் தங்களுடைய பணியை சரியாக செய்ய முடியாது. விளைவு, ரத்தத்தில் கழிவு தேங்குதலில் ஆரம்பித்து, கால் வீக்கம், வெரிகோஸ் வெய்ன், சிறுநீரகக்கல், அரிதாக சிலருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து ஆக்சிஜன் கிடைக்காமல் மயங்கியும் விழலாம். மாதவிடாய் நாட்களிலும் இவ்வாறு தொடர்ந்து நின்றுகொண்டே இருந்தால் மயக்கம் வரும்” என்று எச்சரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ்.
பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள், நடுத்தர வயதினர், ஆண்கள் – பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் தங்கள் பொருளாதார தேவைக்கு இந்த ‘விற்பனை வேலை’யைத்தான் நம்பியிருக்கிறார்கள். தங்கள் வாழ்வாதாரமே இதுதான் எனும்போது, தங்களுடைய உரிமைக்காக குரல் எழுப்பும் துணிவு அவர்களுக்கு இல்லாமல் போகலாம். ஆனால், அவர்களுடைய நலன் கருதி, ‘உட்காரும் உரிமை’க்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்த தமிழக அரசு, அதனை தமிழ்நாடு முழுக்க இருக்கிற அனைத்து வணிக நிறுவனங்களும் பின்பற்றுகின்றனவா என்பதையும் அடிக்கடி கண்காணித்தால் நலமாக இருக்கும் என்பதே நம் விருப்பம்!
