“நிறைய மிரட்டல்களை சந்தித்து இருப்பீர்கள் அதையெல்லாம் உறுதியாக எப்படி எதிர்கொள்கிறீர்கள்?”
“நிறைய மிரட்டல்களை நான் சந்தித்துள்ளேன். மாணவர் சங்கப் பணியில் இருக்கும் பொழுது நடந்திருக்கிறது. மலைவாழ் மக்கள் சங்க பணியில் இருக்கும் பொழுதும் நிறைய மிரட்டல்கள் நடந்திருக்கின்றன. வாச்சாத்தி சம்பவத்தில் தலையிட்ட பொழுது வனத்துறையில் இருந்து, காவல்துறையிலிருந்து நிறைய மிரட்டல்களை சந்தித்துள்ளேன். வாச்சாத்தி சம்பவத்தில் தலையிட்ட பொழுது, பாதுகாப்பு இல்லாமல் வாச்சாத்தி பகுதிக்கு சென்றதே இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் பயணிக்கும் பொழுது, தோழர்களுடைய பாதுகாப்புடன், ஆயுதங்களுடன் தான் சென்று இருக்கிறேன். எல்லோருமே அரசாங்க ஊழியர்கள் காவல்துறை சார்ந்தவர்கள், வனத்துறை சார்ந்தவர்கள் எனவே பாதுகாப்புடன் தான் நான் பயணம் செய்திருக்கிறேன்.”

“வாச்சாத்தி சம்பவம் எப்போது உங்களுக்கு தெரிய வருகிறது, எப்போது நீங்கள் அந்த கிராமத்திற்குள் செல்கிறீர்கள்?”
“அந்த சம்பவம் நடந்தது 1992 ஜூன் மாதம் 20, 21, 22 ஆகிய தேதிகள். நாங்கள் அந்த பகுதியில் சென்றது ஜூலை மாதம் 14ஆம் தேதி. இதற்கிடையில், மலைவாழ் சங்கத்தின் சார்பாக எல்லா மலைகளிலும் அமைப்பை உருவாக்குவதற்காக, ஒரு மாநாட்டை தமிழ்நாடு முழுவதும் நடத்திக் கொண்டிருந்தோம். அந்த மாதிரி ஒரு மாநாடு சித்தேரி மலையில் நடந்த பொழுது, தலைவர்கள் பேசுவதை பார்த்துவிட்டு வாச்சாத்தி பகுதியில் இருந்து தப்பித்து வந்த 2 பேர் தாமாக முன்வந்து வாச்சாத்தி கிராமத்தில் இப்படி நடந்தது, ஊரில் யாரும் இல்லை, பெண் பிள்ளைகள் மற்றும் ஆண்கள் 200 பேர் ஜெயிலில் அடைத்துள்ளனர், ஆடு மாடுகளை கொண்டு போய் சந்தையில் விற்று விட்டார்கள், பெண் பிள்ளைகளை கெடுத்து விட்டார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறார்கள். எனவே இவர்கள் சொல்வதை வைத்து நம் உடனே தலையிட முடியாது. அதனால் நேரடியாக அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்ற முறையில் ஜூலை மாதம் 14ஆம் தேதி சென்றோம்.

நாங்கள் சென்றபோது அந்த கிராமத்தில் யாருமே கிடையாது, பேச்சு இல்லாத கிராமமாக அது இருந்தது. கிராமம் இருந்தது மக்கள் இருந்ததற்கான சுவடுகள் இருந்தது. மக்கள் வாழ்ந்ததற்கான வீடுகள் இருந்தது. ஆனால் மக்கள் யாரும் இல்லை. அப்படி ஒரு பேச்சு இல்லாத கிராமமாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் தலையிட்ட பிறகு அது சிபிஐ விசாரணைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கிட்டத்தட்ட 33 வருடங்களாக அந்த வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள ஜுடிசியல் சிஸ்டத்தில் உள்ள பிரச்சனை, ஏனென்றால் அந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு 19 வருடங்கள் ஆனது. என்னவென்றால் நீதிபதி விடுமுறை எடுக்கிறார், வக்கீல் விடுமுறை எடுக்கிறார், சாட்சி வராமல் இருப்பது இதுபோன்று ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது.
