அந்த தகவல் மாவட்ட நிர்வாகம் மூலம் அமைச்சர் பொன்முடியின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டது. அதையடுத்து காலை 11 மணிக்கு மகனும், தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கௌதம சிகாமணி, மாவட்ட ஆட்சியர் பழனி, விழுப்புரம் எஸ்.பி தீபக் சிவா, திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அங்கு வந்த அமைச்சர் பொன்முடி, தன்னுடைய காரில் இருந்தபடியே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது, `காரில் இருந்து இறங்க மாட்டீங்களா..?’ என்று அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். அதையடுத்து காரில் இருந்து இறங்கிய அமைச்சர் பொன்முடி, பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சென்றார். அப்போது திடீரென யாரோ சிலர் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி, ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது சேற்றை வாரி இரைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தனி பாதுகாப்புப் பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் விஜயராணி, ராமர் என்ற ராமகிருஷ்ணன் என்ற இருவர்தான் அமைச்சர் மீது சேற்றை வீசியதாக தெரிவித்த போலீஸார், தலைமறைவான அந்த இருவரையும் தேடும் பணியில் இறங்கினர். ஆனால் தற்போது வரை அவர்கள் இருவரும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். அதனால் அவர்களின் உறவினர்களை அழைத்து வந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது போலீஸ். அதன்படி ராமகிருஷ்ணனின் உறவினரான துரை என்பவரை நேற்று முன் தினம் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் போலீஸார்.
