
ஒன்றுபட்ட இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில், தற்போது பாகிஸ்தானில் உள்ள கா (Gah) எனும் கிராமத்தில் 1932 செப்டம்பர் 26 அன்று பிறந்தவர் மன்மோகன் சிங். பின்னர் குடும்பம் அமிர்தசரஸுக்கு குடிபெயர்ந்த நிலையில், 1957-ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1962ல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.பில் பட்டம் பெற்றார்.
ஐக்கிய நாடுகள் அவையின் வர்த்தக மேம்பாட்டுக்கான பிரிவில், 1966 முதல் 1969 வரை, புகழ்பெற்ற பொருளாதார வல்லுநரான ரவுல் ப்ரீபிஷ் (Raul Prebish) தலைமையில் பணியாற்றிய பெருமை பெற்றவர் மன்மோகன் சிங். பின்னர் ஐக்கிய நாடுகள் அவையின் பணியிலிருந்து விலகி, டெல்லி பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியராக சேர்ந்தார்.
தொடர்ந்து, 1971-ல் நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர், 1972-ல் நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சக செயலாளர், திட்டக்குழு துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் என அவர் வகித்த பதவிகள் ஒவ்வொன்றிலும் தனிமுத்திரையைப் பதித்தார்.
அவர் பணிரீதியாக பல உயர்வுகளை சந்தித்தபோது இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்களே பிரதமர்களாக இருந்தார்கள். திட்டக்கமிஷன் துணைத்தலைவராக இருந்த அவரை பிரதமருக்கான பொருளாதார ஆலோசகராக ராஜீவ் நியமித்துக்கொண்டார். ராஜீவின் நன்மதிப்பைப் பெற்றவர் என்பதால் அவரது படுகொலைக்கு பிறகு அமைந்த காங்கிரஸ் அரசின் நிதி அமைச்சரானார் மன்மோகன்சிங்.
சவால்கள் நிறைந்த சூழலில் இந்தியப் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கமாக மாற்றினார் மன்மோகன்சிங். அப்போது மன்மோகன் சிங் எடுத்த சில முக்கியமான முடிவுகள் இந்திய பொருளாதாரத்தின் போக்கையே மாற்றியமைத்தன.
பின்னாளில் வங்கிகளில் தனியாருக்கான கதவுகளை திறந்துவிட்டார். பொதுத்துறையின் பங்குகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை தனியாருக்கு விற்பது என்ற முடிவு இதில் மிக முக்கியமானது. நேருவின் சோஷலிசப் பாதையிலிருந்து காங்கிரஸ் விலகுவதாக எதிர்க்கட்சிகள் தீவிரமான விமர்சனத்தை முன்வைத்த போதிலும், மன்மோகன்சிங் தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றார்.
அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான முதலீடுகளை அதிகரித்தல், வணிக முறைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துதல், வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல், தொழில்துறை சார்ந்த கட்டுப்பாடுகளை தளர்த்துதல் என மன்மோகன்சிங்கின் அதிரடிகள் தொடர்ந்தன.
இவற்றின் விளைவாக 1991ல் 127 கோடி ரூபாயாக இருந்த அந்நிய முதலீடு 1996ல் சுமார் 340 கோடி ரூபாயாக அதிகரித்தது. 1991ல் 16 விழுக்காடாக இருந்த பணவீக்கம் 1996ல் 9 விழுக்காடாகக் குறைந்தது.
2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தபோது சோனியா இந்தியரல்லர் என்ற முழக்கம் ஓங்கியபோது பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக இருந்து பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
Also Read | முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. இந்திய பொருளாதாரத்தை மீட்ட மாமேதை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், மகளிருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் சட்டம், கல்வி பெறும் உரிமைச்சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என பலவற்றுக்கு வித்திட்டவர். இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தமும் மன்மோகன் ஆட்சியில் கையெழுத்தானது.
மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் ப.சிதம்பரம், டிஆர் பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், அன்புமணி, ஜிகே வாசன், முக அழகிரி, ஜெகத்ரட்சகன் உள்பட 21 தமிழர்கள் இடம்பெற்றிருந்தனர்.
மவுன சாமியார் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட மன்மோகன் சிங், எப்போதெல்லாம் பேசினாரோ அப்போதெல்லாம் இந்திய பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் கருத்துக்களை முன்வைத்தார்.
இந்திய பொருளாதார சீர்திருத்தவாதி, பொருளாதார மேதை, சிந்தனைச் சிற்பி என்ற பல பட்டங்களுக்குச் சொந்தக்காரர் மன்மோகன் சிங். பல்வேறு விருதுகளை பெற்றவரான மன்மோகன் சிங் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை 1987-ல் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 27, 2024 6:12 AM IST
