அதன் ஒரு பகுதியாக மேலூர் முல்லைப்பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டங்க்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, இன்று மதுரை தலைமை தபால் நிலையம் முன் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மேலூர் பகுதியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் கடைகளை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மேலூரை சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் பேரணியாக கிளம்பி நரசிங்கம்பட்டியில் கூடியிருந்த விவசாயிகளோடு சேர்ந்து மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபயணத்தை மேற்கொண்டனர்

ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியும், BAN TUNGSTEN என்ற பதாகைகளை ஏந்தியவாறு, 20 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து வந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதே போன்று பல்வேறு பகுதிகளிலிருத்தும் நூற்றுக்கணக்கான டிராக்டர்கள், சிறிய வாகனங்களிலும் மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.
இதனால் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடைபயணமாக வர அனுமதி மறுத்த காவல்துறையினர் வெள்ளரிபட்டி மற்றும் சிட்டம்பட்டி, ஒத்தகக்கடை பகுதிகளில் தடுக்க முற்பட்டபோது காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளு ஏற்பட பேச்சுவார்த்தைக்குப் பின் பேரணி தொடங்கியது. பேரணியில் வந்த விவசாயிகளுக்கு போராட்ட குழுவினருக்கு ஒத்தக்கடை, மாட்டுத்தாவணி பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் பாட்டில்களையும், உணவுகளையும் வழங்கி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்
