இது குறித்து சரத்பவார் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜிதேந்திர அவாட் கூறுகையில், ”சிறப்பு விசாரணைக்குழு அமைத்தபோது அதில் வால்மிக் கராட்டிற்கு நெருக்கமான மூன்று பேர் அதில் இருந்தனர். அது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த பிறகுதான் அவர்களை நீக்கினர். பீட் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்துள்ளது. சி.ஐ.டி போலீஸார் டிசம்பர் 31ம் தேதி வரை வால்மிக் கராடை கண்டுபிடிக்கவில்லை. அவராகத்தான் புனேயில் சரணடைந்தார்”என்று குற்றம் சாட்டினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் இது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பஞ்சாயத்து தலைவர் படுகொலை தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து அனைத்துக்கட்சிகளும் நெருக்கடி கொடுத்து வருவதால் இவ்விவகாரத்தில் துணை முதல்வர் அஜித் பவாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அஜித் பவார் அமைச்சர் தனஞ்சே முண்டேயுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தைக்கு பிறகு அஜித்பவார் அளித்த பேட்டியில்,”கொலை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யட்டும். அதன் அடிப்படையில் அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்”என்று தெரிவித்தார்.
நேற்று இரவு இப்பிரச்னை குறித்து அஜித்பவார் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸையும் சந்தித்து பேசினார். இவ்விவகாரத்தில் தேவேந்திர பட்னாவிஸும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக அஜித் பவார்தான் முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தார். இதனால் பட்னாவிஸ் சற்று தயங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகளின் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
