கோயில்வெண்ணி பகுதி, மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட பகுதியாகும். அப்பகுதியில் டோல்கேட் அமைத்துள்ளது விவசாயிகளுக்கு தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. சாலை பணி மேற்கொள்ள தரமான மண்ணை பயன்படுத்தாமல் அருகில் இருந்த வாய்க்கால்களிலும் வயல்வெளிகளிலும் இருந்த களிமண்ணை பயன்படுத்தி உள்ளதால் பல இடங்களில் பள்ளம் விழுந்துள்ளது. பக்கவாட்டில் எந்த பாதுகாப்பு பணியும் மேற்கொள்ளாமல் இருப்பதால் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. எனவே விபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும், நெடுஞ்சாலை பணியை துரிதப்படுத்தவும், கோயில்வெண்ணி டோல்கேட்டை அப்புறப்படுத்தவும் எங்கள் அமைப்பின் சார்பிலும், அனைத்துக் கட்சியினர் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் முதற்கட்ட போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதே நிலை நீடித்தால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்” என்று கூறினார்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் செல்வகுமாரிடம் பேசினோம். “இந்த தேசிய நெடுஞ்சாலை ஓரம் 29,000 மரக்கன்றுகள் நட ஒப்புதல் பெறப்பட்டு, முதற்கட்டமாக 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. மண்ணின் தரம் குறித்து தேசிய நெடுஞ்சாலை பொறியாளர்களிடமிருந்து எந்த ஒரு குறையும் எங்களிடத்தில் செல்லவில்லை. அதிக விபத்துகள் ஏற்படும் இடத்தில் வேகத்தடை, சாலை தடுப்பு மற்றும் ஒளி எதிரொளிப்பான்கள் போன்றவை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த இடங்களில் மேம்பாலம் கட்டும் பணியைத் துரிதப்படுத்தி உள்ளோம்” என்று கூறினார்.
இந்த தேசிய நெடுஞ்சாலை பணியைத் துரிதப்படுத்தி அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து கட்சியினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
