
Last Updated:
PM Modi | துவாரகாவில் 300 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள சிபிஎஸ்இயின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகம், நவுரோஜி நகரில் புதிய உலக வர்த்தக மையம் உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லியின் நஜப்கர் பகுதியில் வீர் சாவர்க்கர் கல்லூரியை திறந்து வைத்த பிரதமர் மோடி, ஆம் ஆத்மி ஆட்சியால் தலைநகர் பேராபத்தில் சிக்கியிருப்பதாக தெரிவித்தார்.
பிப்ரவரி மாதம் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி முடிவு பெற்ற வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார். இதில் கிழக்கு டெல்லியில் நஜப்கர் பகுதியில் கட்டப்பட்டுள்ள வீர் சாவர்க்கர் கல்லூரியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் 600 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மேலும், குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அசோக் விஹார் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 675 வீடுகளை திறந்து வைத்த பிரதமர் மோடி பயனாளிகளுக்கு வீட்டுச் சாவியை வழங்கினார்.
இது தவிர துவாரகாவில் 300 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள சிபிஎஸ்இயின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகம், நவுரோஜி நகரில் புதிய உலக வர்த்தக மையம் உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, இன்று டில்லிக்கு முக்கியமான நாள். வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. வீடுகள் வழங்கி 4 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றினேன். எனக்காக வீடு கட்டியிருக்கலாம்; ஆனால் கட்டவில்லை. இது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மியால் டெல்லியில் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மதுபான கொள்கை முறைகேடு, காற்று மாசுவுக்கு எதிரான நடவடிக்கை, பள்ளிக் கல்வித்துறை என பல்வேறு துறைகளில் ஆம் ஆத்மி ஊழல் செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். புதிய ஆண்டில் டெல்லியை மறுசீரமைப்பு செய்யும் வகையிலான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஊழலில் திளைக்கும் ஆம் ஆத்மி அரசு வெளியேற்றப்படும் என பிரதமர் மோடி கூறினார்.
Delhi,Delhi,Delhi
January 03, 2025 5:06 PM IST
