
Last Updated:
ஆஹா இப்படி ஒரு நபரா என காண்போரை கண்கலங்கச் செய்து விடும். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் செய்த காரியத்தைப் பார்த்தால் காண்போர் கதிகலங்கிப் போவார்கள்.
கோவிலுக்கு வந்த பக்தர் சுமார் 15 நிமிடங்கள் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்திற்கு சென்று ஜென்நிலையில், அனுமனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைப் பார்த்தால்.. ஆஹா இப்படி ஒரு நபரா என காண்போரை கண்கலங்கச் செய்து விடும். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் செய்த காரியத்தைப் பார்த்தால் காண்போர் கதிகலங்கிப் போவார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் அனுமன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கு வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் அமைதியின் மறு உருவமாய் வந்த நபர் சாமி சன்னதி முன்பு அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனையில் மூழ்கினார்.
ஒரு நிமிடம் 2 நிமிடம் இல்லை, சுமார் 15 நிமிடங்கள் ஆழ்ந்த தியானத்திற்கு சென்று அனுமனுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதை பார்த்த மற்றவர்கள் எப்படிப்பட்ட பக்திமான் இவர் என்று நினைத்தபடி அவரை கடந்து சென்றுள்ளனர்.
ஆனால் அதன் பின்னர் அவர் செய்த சீட்டிங் சம்பவம்தான், ‘இதுக்காடா இவ்ளோ பில்டப் கொடுத்த’ என்று கேட்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. 15 நிமிட ஆழ்நிலை தியானத்திலிருந்து வெளியே வந்த அவர் பின்னர் மெல்ல எழுந்து கருவறைக்குள் சென்றுள்ளார்.
ஒருவேளை அனுமனின் காலில் விழுந்து கும்பிடுவாரோ என நினைத்தால் அவரது தலையிலேயே கை விட்டு விட்டார். அனுமன் தலையில் அணிந்திருந்த வெள்ளி கிரீடத்தை நைசாக எடுத்து தன்னிடமிருந்து பைக்குள் திணித்த அவர் திரும்பிப் பார்க்காமல் வெளியே வந்துள்ளார்.
அக்கம்பக்கத்தில் யாரும் இருக்கிறார்களா? என நோட்டம் விட்ட வாறு அந்த நபர் மெதுவாக கோவிலில் இருந்து வெளியே நழுவிச் சென்றுள்ளார். பக்திமானாக உள்ளே வந்து பக்காதிருடனாக மாறி வெளியே போனது வரை அனைத்து காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
சற்று நேரத்தில் சன்னதிக்கு வந்த பூசாரி தூக்கிவாரிப் போட்டுள்ளது. சாமி சிலையில் இருந்த கிரீடம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
உடனே காவல்நிலையத்தில் புகார் அளிக்க, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து குத்த வைத்து குற்றம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர் . பக்தனாக இருந்து பக்கா திருடனாக மாறிய இந்த திருட்டு தில்லாலங்டியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
January 01, 2025 2:17 PM IST
