கும்பகோணம் மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் மேயராகவும், தி.மு.க-வைச் சேர்ந்த சு.ப.தமிழழகன் துணை மேயராகவும் இருக்கின்றனர். மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 50 தீர்மானங்களை நிறைவேற்றி மேயர் சரவணன் கையெழுத்திட்டுள்ளார். அதன் கோப்புகளை பார்க்க வேண்டும் என திமுக கவுன்சிலர், மாநகராட்சி பொதுக்குழு உறுப்பினர் குட்டி.தெட்சிணாமூர்த்தி கேள்வி எழுப்பினார். இதையடுத்து மேயர் சரவணன், கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கூறி விட்டு எழுந்து தன் அறைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

அப்போது குட்டி.தெட்சிணாமூர்த்தி, மேயர் அறைக்கு முன் உட்கார்ந்து கொண்டு கோப்புகளை காட்டாமல் உள்ளே செல்ல விட மாட்டோம் என்றுள்ளார். ஆனாலும் மேயர் சரவணன், குட்டி.தெட்சிணாமூர்த்தி மீது ஏறி உள்ளே சென்றார். அப்போது `மேயர் என்னை கொல்லப் பார்க்கிறார், எனக்கு நெஞ்சு வலிக்குது” என்று தெட்சிணாமூர்த்தி கத்தினார். அங்கிருந்த துணை மேயர், `நான் எழுந்திருக்க சொல்கிறேன்’ என மேயரிடம் சொன்னார். ஆனால் அதை கேட்காத மேயர், தானும் கீழே விழுந்து `என்னை காப்பாத்துங்க, என்னை அடிக்க வருகிறார், கேட்க ஆள் இல்லை, என்னை காப்பாத்துங்க, என்னை கொல்ல வருகிறார்’ என தரையில் விழுந்து உருண்டு புரண்டு கத்தினார்.
