`தமிழுக்கு அதிகாரம் தந்தவர்..’ – வைரமுத்து
நிகழ்ச்சி தொடக்கத்தில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், “சில வரலாற்றுச் சங்கமங்கள் இங்கே நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன. பூகோள சங்கமம், கடலியல் சங்கமம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழுக்கு அதிகாரம் தந்தவர் வள்ளுவ பேராசான், தமிழ்நாட்டுக்கு அதிகாரம் தந்தவர் ஸ்டாலின். தமிழின் அதிகாரமும், தமிழர்களின் அதிகாரமும் ஒன்றுகூடுகின்ற சங்கமத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம். முத்தமிழறிஞர் ஆசான் கலைஞருக்கு முதல் நன்றி, கால் நூற்றாண்டுக்குப்பின் வெள்ளி விழாவில் கருத்தரங்குக்கு அழைத்த முதல்வருக்கு அடுத்த நன்றி. திருவள்ளுவர் சிலைக்கு பேரறிவுச்சிலை என பெயர் வைத்ததற்காக நன்றி. தனி மனிதருக்கு, நிறுவனத்துக்கு, கட்சிக்கு அடையாளம் உண்டு. அதுபோன்று நிலத்துக்கு அடையாளம் உண்டு. வடவேங்கடம் தென்குமரி என்பார்கள். தமிழர்களின் அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோயில். வள்ளுவர் பேராசான் வகுத்துகொடுத்த குறள்கள்தான் அறிவு அடையாளம், ஞான அடையாளம்.

`2000 ஆண்டுகள் ஆகியும் ஒரு எழுத்துக்கூட திருத்தப்படவில்லை’
அரசமைபுச் சட்டம் நிறுவப்படு 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்குத் தெரிந்தவரை 101 முறை திருத்தப்படுள்ளது இந்த அரசமைப்புச் சட்டம். ஆனால், எழுதப்பட்டு 2000 ஆண்டுகள் ஆகியும் ஒரு எழுத்துக்கூட திருத்தப்படாமல், மாற்றாமல் விளங்குகிறது திருக்குறள். எல்லா மெய் நூக்களுக்கும் மத ஆதரவு, அரசாங்க ஆதரவு இருந்தது. ஐரோப்பிய சட்டங்கள் கிரேக்க ரோமானிய மெய்நூல்களால் ஆக்கப்பட்டன. யூதர்களின் சட்டங்கள் விவிலியத்தின் பழைய ஏற்பாடுகளை கொண்டுதான் உருவாக்கப்பட்டது. திருக்குரானின் சட்டங்களை இஸ்லாத் ஏற்றுக்கொண்டது. ஆனால், எந்த மதத்தின் ஆதரவும் இல்லாமல், அரசனின் ஆதரவும் இல்லாமல் மிதந்து கரையேறியது தமிழனின் திருக்குறள். எல்லா உயிர்களும் இன்பத்தில் பிறந்து, இன்பத்தில் வளர்ந்து, துன்பத்தில் முடிந்துபோகிறது. எல்லா உயிர்களும் இன்பத்தை விரும்புகிறது. ஆனால் வள்ளுவர் சொன்னார் இன்பம் வேண்டும் அதை தவிர்க்கவில்லை. ஆனால், அறத்தால் வருவதுதான் இன்பம் என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அரசன் எப்படி இருக்க வேண்டும் என வள்ளுவர் சொல்கிறார்.
