
Last Updated:
ISRO: சந்திரயான் 4 திட்டம் மூலம் நிலவில் ஆய்வு மேற்கொள்ளவும் இந்த டாக்கிங் திட்டம் அவசியமானது என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவ சுப்பிரமணியன் தெரிவித்தார்.
விண்வெளியில் ஆய்வு மையம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய இரண்டு செயற்கைகோள்கள் அடங்கிய பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்டை நேற்று இரவு வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் Bharatiya Antariksha Station எனும் ஆய்வு மையத்தை நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்தின் மூலம் இரண்டு செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட், பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ராக்கெட்டில் இருந்து ஒரு நிமிட இடைவெளியில் ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைகோள்களும் பிரிந்ததாக இஸ்ரோ தெரிவித்தது. ராக்கெட் ஏவப்பட்டதை மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் என திரளானோர் கண்டு வியந்தனர்.
விண்வெளியில் தனி ஆய்வு மையம் அமைப்பதற்கும், ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்ணில் அனுப்புவதற்கும், சந்திரயான் 4 திட்டம் மூலம் நிலவில் ஆய்வு மேற்கொள்ளவும் இந்த டாக்கிங் திட்டம் அவசியமானது என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவ சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவனின் யோசனையில் இருந்து உதித்தது தான் இந்த ஸ்பேஸ் டாக்கிங் திட்டம் என்று அவர் தெரிவித்தார். ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்தில் இந்தியா தனக்கென தனியாக தொழில்நுட்ப முறையை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்று உள்ளதாக கூறினார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஒரு வார இடைவெளியில் 2 செயற்கைகோள்களும் அதிகபட்சமாக 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்றார். வரும் ஜனவரி 7ம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
ஸ்பேஸ் டாக்கிங் திட்ட இயக்குநர் சுரேந்திரன் பேசுகையில், மற்ற செயற்கைக்கோள் போல் அல்லாமல் ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்தில், மிக வேகமாக பயணிக்க கூடிய 2 செயற்கைகோள்களை மிக துல்லியமான சென்சார் மூலம் விண்வெளியில் பிரித்து, மீண்டும் ஒன்றிணைப்பது சவாலானது என்றார்.
மேலும், நிலவில் உள்ள சீதோஷ்ண நிலையை எதிர்கொள்ளும் வகையில், பிரத்யேக அமைப்பு உருவாக்கப்பட்டு அதில் செயற்கைகோள்கள் சோதனைக்கு பின்னர் விண்ணில் செலுத்தப்பட்டதாக திட்ட இயக்குநர் தெரிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 31, 2024 6:57 AM IST
