டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “நேற்று முதல் காங்கிரஸ் உண்மைகளைத் திரித்து வருவதைக் கண்டிக்கிறேன். அம்பேத்கர், இட ஒதுக்கீடு, அரசியல் சாசனத்துக்கு எதிரானது காங்கிரஸ். சாவர்க்கரையும் காங்கிரஸ் அவமதித்திருக்கிறது. எமெர்ஜென்சியின் மூலம் அரசியலமைப்பின் விழுமியங்களை அவமதித்தனர். நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அம்பேத்கரைக் காங்கிரஸ் எப்படி எதிர்த்தது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அவர் இறந்த பிறகும் காங்கிரஸ் அவரைக் கேலிசெய்ய முயன்றது. பாரத ரத்னா விருது பொறுத்தவரை, காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்குப் பலமுறை பாரத ரத்னா வழங்கிக்கொண்டனர். 1955-ல் நேரு தனக்கு பாரத ரத்னா கொடுத்துக்கொண்டார். 1971-ல் இந்திரா தனக்கு பாரத ரத்னா கொடுத்துக்கொண்டார். ஆனால், 1990-ல் தான் அம்பேத்கருக்குப் பாரத ரத்னா கிடைத்தது. அதுவும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாதபோது, பா.ஜ.க ஆதரவு ஆட்சியில்.
