வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி எடுத்துச் சென்ற “பாலஸ்தீன்’ என எழுதப்பட்ட கைப்பை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கு பாஜக-வினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், இது `வகுப்புவாத நடவடிக்கை’ எனக் கூறியுள்ளனர்.
பிரியங்கா காந்தி தொடர்ந்து காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடக்கும் போர் வன்முறைக்கு எதிராக குரலெழுப்பி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் காசா மக்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தும் கொடுமைகளை `மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்’ என விமர்சித்திருந்தார்.
பாலஸ்தீன தூதரக பிரதிநிதி அபேத் எல்ராசெக் அபு ஜாசரை சந்தித்த பிரியங்கா காந்தியின் நிலைப்பாடு குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. அபு ஜசார், பிரியங்காவின் வயநாடு தொகுதி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், பாலஸ்தீன பிரச்னையில் இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தை எளிதாக்க இந்தியா முன்னின்று உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
