தங்கத்தின் விலை பல்வேறு நாடுகளில் நிலவும் பொருளாதாரம் வங்கிகளின் முக்கிய முடிவுகள் சர்வதேச அரசியல் என்று பல்வேறு காரணங்களை ஒட்டியும் தேவை கருதியும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது . இந்த வருடம் தங்க விலை உயர்வுக்கு ரஷ்யா உக்ரைன் இடையில் உள்ள போர், ஈரான் – இஸ்ரேல் நாடுகளிடையே நடந்த பதற்றம், அமெரிக்கா அதிபர் தேர்தல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றது. சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் தங்கள் நாட்டு தங்கத்தின் கையிருப்பை உயர்த்தி கொள்ள டன் கணக்கில் கொள்முதல் செய்ததால் ஏற்பட்ட டிமாண்ட் என்று பல்வேறு காரணங்களால் விலையில் ஏற்றம் தொடர்ந்து இருந்தது. அமெரிக்க தேர்தலில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் டொனால்ட் டிரம்ப் அவர்களின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை. அவர் எடுக்க போகும் சீரமைப்பு நடவடிக்கைகள் அமெரிக்கா வங்கி வட்டி விகித மாற்றங்கள், பல்வேறு உலக நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், வேலை பற்றாக்குறை என்று பல விசயங்கள் வரும் காலத்தில் தங்க விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

