நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள அரவேணு பகுதியில் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டத்திற்கு முன்பாக படுகர் இன மக்களின் குல தெய்வமான கேர்பெட்டா ஹெத்தையம்மன் கோயிலுக்கு சென்று காணிக்கை செலுத்தி வழிபட்டார். படுகர் இன மக்களுடன் தேநீர் அருந்தி கலந்துரையாடினார்.

தொடர்ந்து செய்திகளிடம் பேசிய சீமான், ” 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். நிறைய கோரிக்கைகள் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை வசமாக்குவது தான் எங்களின் லட்சியம். உரிமையை போராடி தான் பெற வேண்டும் என அண்ணல் அம்பேத்கர் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பில் விகடன் குழும புத்தகத்தை தம்பி விஜய் வெளியிடுகிறார். இதை நான் வரவேற்கிறேன். அம்பேத்கரை மக்கள் மத்தியில் யார் கொண்டு சேர்த்தாலும் நாம் வரவேற்க வேண்டும் ” என்றார்.
