சர்க்கரை நோயை உறுதிப்படுத்துவது எப்படி?
சர்க்கரை நோயை உறுதிப்படுத்த 3 வகையான ரத்தப் பரிசோதனைகள் உள்ளன.
பொதுவான ரத்தப் பரிசோதனையின்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 140-க்கு கீழ் இருக்க வேண்டும். (140 mg / dl) 140 – 200 இருக்கிறது என்றால் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக பொருள். 200க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருப்பது உறுதி.
இதில் உணவுக்குப் பிறகு சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதா? சாப்பிடுவதற்கு முன்பு அதிகமுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
சர்க்கரை நோயானது சமீபத்தில் வந்துள்ளதா? நீண்டகாலமாக உள்ளதா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு 3 விதமான பரிசோதனைகள் உள்ளன.
முதல் பரிசோதனை
காலையில் உணவு உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் ரத்தம் எடுத்து பரிசோதிப்பது.
பரிசோதனை மேற்கொள்வதற்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் (7 – 8 மணி) வெறும் வயிற்றில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுக்க வேண்டும். இந்தப் பரிசோதனையில் 100க்கும் குறைவாக இருந்தால் சர்க்கரை நோய் இல்லை. 100 – 125 இருந்தால் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 125க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருப்பது உறுதியாகிறது.
இரண்டாவது பரிசோதனை
காலை உணவுக்குப் பிறகு 2 மணிநேரம் கழித்து மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் 140க்கு கீழ் இருந்தால் சர்க்கரை நோய் இல்லை. 140 – 200 என்றால் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 200க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருப்பது உறுதியாகிறது.
மூன்றாவது பரிசோதனை
3 மாத சராசரியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் ஹீமோகுளோபின் அளவு 5.7க்கு கீழ் இருக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் சர்க்கரை நோய் இல்லை. 5.7 – 6.5 இருந்தால் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. மாறாக 6.5க்கு அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் இருப்பது உறுதியாகிறது.
இவ்வாறு இருப்பவர்கள் சர்க்கரை நோய் அல்லது பொதுமருத்துவரை அணுகி அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், அதற்கேற்ப உணவு முறைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
சர்க்கரைக்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் 3 – 6 மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் இருப்பவர்கள் சராசரியான உணவை எடுத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, சர்க்கரை நோயாளி எடுத்துக்கொள்ளும் உணவு முறைகளையே கடைபிடிக்க வேண்டும். இதோடு உடற்பயிற்சி செய்தால் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் எந்தவித மாற்றமும் இன்றி தொடரலாம்.
கட்டுரையாளர்:
சர்க்கரை மற்றும் பொது மருத்துவ நிபுணர்
