கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (நவம்பர் 12) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
திக்கணங்கோட்டில் நடந்த கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அமரன் சினிமா என்பது முகுந்த் என்ற வீரனின் வாழ்க்கையில் நடந்த கதை. அதைப் படமாகப் பார்த்தால் நேர்த்தியான படம். அத்துடன் அதை விட்டுவிட வேண்டும். அதுவே நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தில் தொழுகை நடத்திவிட்டு குண்டு வெடிப்பது போன்று காட்சி அமைத்திருந்தார். அதை எதிர்த்து நான் மட்டும்தான் குரல் கொடுத்தேன்.

நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் சிதறுகிறது, அது தா.வெ.க-வுக்குப் போகிறது எனச் சொல்கிறார்கள். தா.வெ.க-வுக்குச் செல்பவர்கள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களே கிடையாது. அது சில பைத்தியங்களின் புலம்பல். நான் கருணாநிதி, ஜெயலலிதா காலத்திலே கட்சி துவங்கியவன். அவர்களை விட விஜய் பெரிய தலைவரா? அல்லது அவர்களை விடக் கூட்டம் அதிகம் வந்துவிட்டதா?
பொழுதுக்குத்தளத்தில் தலைவர்களைத் தேடுபவர்கள் என்னை பின் தொடரமாட்டார்கள். போராட்டக்களத்தில் தலைவர்களைத் தேடுபவர்களும்தான் என்னை பின் தொடர்வார்கள். சீமானின் வாக்கு வங்கி குறையும் என்று கார்த்திக் சிதம்பரம் கூறியிருக்கிறார். எனக்கு வாக்கு வங்கியில்தான் குறையும். உங்களுக்குத்தான் வாக்கே கிடையாதே. நானும், கார்த்திக் சிதம்பரமும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்தான். இரண்டுபேரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டுப் பார்ப்போம். கூட்டணி இல்லாமல், பணம் கொடுக்காமல் போட்டியிடுவோம். யார் வெற்றிபெறுகிறார்கள் எனப் பார்ப்போம். அதற்கு அவர் தயாரா. நான் கூட்டணி வைக்காமலும், காசு கொடுக்காமலும் ஒன்றரை லட்சம் வாக்கு வாங்கியிருக்கிறேன். 2026 தேர்தலில் எவ்வளவு வாக்கு வாங்குகிறேன், எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் எனப் பார்க்கத்தான் போகிறீர்கள்.

தமிழ்த்தேசியமும் திராவிடமும் இரண்டு கண்கள் எனச் சிலர் அறியாமல் சொல்கிறார்கள். இந்தியம், திராவிடம் என்பது ஒரு கற்பிதம். திராவிடம் என்பது சமஸ்கிருத சொல். மாடல் என்பது தமிழ்ச் சொல் அல்ல. எங்கே இருக்கிறது திராவிட நாடு. நான் ஐந்து வயதிலிருந்து களத்தில் இருக்கிறேன். 5-ம் வகுப்பு படிக்கும்போது விவசாயிகள் போராட்டத்துக்காக கம்யூனிஸ்ட் கொடியைப் பிடித்துக்கொண்டு சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்துக்குப் பேரணியாகச் சென்றேன். நான் டீசெண்ட் பொலிட்டீசியன் கிடையாது, டீப் பொலிட்டீசியன். நெஞ்சு முழுக்க காயம், வலி இருக்கிறது. சாதி, மதம், மொழி எனப் பிரியவில்லை என்றால் அகில உலக வெற்றிக்கழகம் எனப் பெயர் வைத்திருக்கலாமே. ஏன் தமிழக வெற்றிக்கழகம் எனப் பெயர் வைத்தீர்கள்.
உங்களுக்குக் கேரளாவில், ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம். கேரளாவில் கட்சி ஆரம்பித்திருக்கலாமே. அடிப்படையே இல்லாமல் அலைந்துகொண்டிருந்தால் எப்படி? அண்ணாமலையிடமும் நான் அதைத்தான் கேட்டேன். தேசிய கட்சிதானே, ஏன் கர்நாடகாவில் மாநில தலைவர் ஆகியிருக்க வேண்டியதுதானே. தமிழ்த்தேசிய அரசியலை நான் கலைத்துவிடுகிறேன். தேசிய ஒருமைப்பாடு பேசுபவர்கள் எதற்காகத் தெலுங்கு தேசம் கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள். தெலுங்கு தேசியம் இனிக்கிறது, தமிழ்த் தேசியம் கசக்கிறதா.

2026 சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் தனித்துத்தான் போட்டியிடும். உலக அரசியல் வரலாற்றில் என்னைப் போலத் தோற்றவர் யாரும் கிடையாது. நான்கு பொதுத்தேர்தல், பத்துக்கும் மேற்பட்ட இடைத்தேர்தல், இரண்டு உள்ளாட்சித் தேர்தலில் தோற்ற கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. குமரி மாவட்டத்தில் சாலைகள் மோசமாக உள்ளன. இதுபற்றி தம்பி விஜய் வசந்த்திடமும், இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சராக இருந்து பதவி நீக்கப்பட்ட பால் வியாபாரியிடமும் நீங்கள் கேட்க வேண்டும். என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள், ரோடு போடாவிட்டால் என்னை அங்கேயே புதையுங்கள். குளச்சலில் நா.த.க பொதுக்கூட்ட மேடை அமைப்பதில் தி.மு.க-வுடன் மோதல் ஏற்பட்டது. என்னை முட்டுச்சந்துக்குள் அடைக்க வேண்டிய தேவை இருக்கிறது. நவம்பர் 1-ம் தேதி ஒரு ஆள் நடக்கக்கூட முடியாத இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த இடம் கொடுத்தார்கள். அதைத்தான் குளச்சலிலும் செய்கிறார்கள். நெருக்கடி தரத்தான் செய்வார்கள். தி.மு.க இதுபோன்ற இடத்தில் பொதுக்கூட்டம் போடுவார்களா?” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
