Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சொற்களால் வந்த சிறை! கவிதைதான் குற்றம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சொற்களால் வந்த சிறை! கவிதைதான் குற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆனாலும், இந்தத் தமிழ்க் கவிஞர்களுக்கு – அன்றும் சரி, இன்றும் சரி – கடவுள் பற்றி கொஞ்சங்கூட பயமே இல்லைபோல் தெரிகிறது.

ஆதியில் –‘தண்டமிழ் மூன்றும் வல்லோன்’ – ஆலவாய்ப் பெருமானே பாட்டெழுதிக் கொண்டுவந்தாலும், ‘வையை நாடவன்’ சங்க மண்டபத்தில் (‘நூலாய்ந்தோர் வைகும் திருந்தவைக்களத்தில்’) வழுவு பாடல் (‘சொற்குற்றமின்று, வேறு பொருட்குற்றம்’’) – பொருட்பிழை – எனப்பட்டது. ‘வெகுண்ட நீள்சடையப் பெருமானைக் குன்றென நேரெதிர் நின்று, ‘நெற்றிக் கண் திறப்பினும், ‘’பாடல் குற்றங் குற்றமே” (கவிக்குற்றம்) என அப்பெருமானிடமே தமிழ்ச் சமர்புரிந்தான், ‘விளைவு நோக்கான்’ எமதூர் நக்கீரன். நற்றமிழுக்காக நக்கீரன் நெற்றிக்கண் நெருப்புக்கிரையானதும், பொசுக்கிய இறையே பூந்தமிழால் கனிந்து, பொற்றாமரைக் குளத்திருந்து நக்கீரனை மீண்டெழ வைத்ததெல்லாம் நாமறிந்த கதையல்லவா?

தலைமுறை தலைமுறையாகத் தமிழ்ப் புலவர்கள் பலருக்கு நக்கீரத் துணிச்சல் நைந்து போகாமல் படர்ந்தே வருகிறது போலும்.

‘வன் தொண்டர்’ சுந்தரர், திருவெண்ணெய்நல்லூரில்‌, அன்றைக்கு எடுத்த எடுப்பிலேயே, சற்றும் தயங்காமல், சிவபெருமானையே ‘பித்தா’ என்றழைத்தார். (பிறைசூடி பெருமானே அருளாளா”); சுந்தரர் அழைத்த அந்தப் பித்தனுக்குக் ‘’காடுடைய சுடலைப்பொடி பூசி’’யவன் என்று அடையாள அட்டை வழங்கினார் ஞானசம்பந்தர்; சுந்தரரை, சம்பந்தரை, ‘வேதப் பனுவலும் பயனுமான’, மூவரில் முன்னோன், கோபித்துக்கொள்ளவேயில்லையே!

‘சரிதான், இவனை (சிவனை) எவ்வளவு வேண்டுமானாலும் வச்சு செய்யலாம், தாங்குவான்’ என்ற நினைப்போடு, பின்னர் வந்த காளமேகப் புலவரோ சிவபெருமானின் மொத்தக் குடும்பத்தையுமே சகட்டுமேனிக்குக் ‘கலாய்’த்தார் கவித் தமிழால். அழகன், அறுபடைகொண்டான், தமிழ் முருகனின் தந்தை (சிவன்), தாய் (உமை), மாமன் (திருமால்), அண்ணன் (விநாயகன்) ஆகிய அனைவருக்கும் கவி காளமேகம் வழங்கியுள்ள கௌரவப் பட்டங்களைப் பாருங்கள்.

அப்பன் இரந்துண்ணி, யாத்தாள் மலைநீலி

ஒப்பரிய மாமனுறி திருடி, சப்பைக்கால்

அண்ணன்பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கிங்

கெண்ணும் பெருமையிவை.

 (இந்தக் கௌரவப் பட்டமளிப்பு விழாவில் ஏனோ பிரம்மனைக் கௌரவிக்கவில்லை கவி(யாளுநர்), வேந்தர் காளமேகம்.)

அவரே இன்னொரு பாடலில், ‘மலைநீலி’ உமை, மதுரை மீனாட்சி, பெருவயிறன் விநாயகனைப் பெற்றெடுத்த ‘கூடல் தொன்மை’யைக்- கீழடிக்கு முன்பே– தோண்டியெடுத்ததைச், சொல்லவா சொல்லவா என்று சுற்றிலுங் கேட்டு, வரலாற்றுக் குறிப்பொன்றும் வழங்கிச் சென்றிருக்கிறார் பாருங்கள்.

‘’நல்லதொரு புதுமை நாட்டிற் கண்டேனதனைச்

சொல்லவா சொல்லவா சொல்லவா – தொல்லை

மதுரை விக்கினேச்சுரனை மாதுமையாள் பெற்றாள்

குதிரை விற்க வந்தவனைக்கூடி’’

இவர்கள்தான் இப்படியென்றால், இக்காலத் தமிழ்க் கவிஞர்களும் ‘ரொம்பத் தில்’லாத்தான்’ எழுதுறாங்க.

காளமேகங் ‘கலாய்த்துப், போனால் போகட்டும்’ என்று போகவிட்ட ’சூரசம்ஹாரன், வேல்வீரன் கந்தனைக் கவியரசு கண்ணதாசன், ஏதோ தெருவில் பார்க்காமல் போகிற பள்ளிநாள் நண்பனை நட்புரிமையோடு பின்னாலிருந்து சட்டையைப் பிடித்திழுத்து ‘நறுக்’னு நாலு கேள்வி கேட்பவரைப்போல,”என்னடா தமிழ்க்குமரா… என்னை நீ மறந்தாயோ? நான் பார்த்ததும் பொய் என்றால், நீ வந்ததும் பொய் என்றால் பக்தியின் விலை என்னடா?” (திரைப்படம்; ‘மனிதனும் தெய்வமாகலாம்”, 1975) என்று எகத்தாளமாகக் கேட்கிறார்.

முருகனைப் போடா, வாடா, என்றழைத்ததோடு நில்லாமல், கடவுளைக் ‘கல்லாய்ப் போனவன்’ என்று சொன்னால் விடுவார்களா இப்போ? (காவி பறக்கும்; ஆவி பறக்கும்!) ஆனால், கவிஞன் கடவுள் கல்லாகிப் போய்விட்டதைச் சந்தேகமில்லாமல் தான் உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டதுபோல, அதற்கான காரணம் என்ன என்று மட்டும் பொதுப்பந்தியில் கேள்விப் ‘பாயசம்’ ஊற்றுகிறார். நல்லவேளை,”கடவுள் ஏன் கல்லானார்?” (‘திரைப்படம் – என் அண்ணன்’) என்று கேள்வி எழுப்பி, உடனே அவரே, ”மனம் கல்லாய் போன மனிதர்களாலே’‘ என்று வடையாக, இல்லை, விடையாகப் பரிமாறிவிட்டார்!

‘கல்லானான்’ கடவுளை- ‘எல்லா உயிர்க்கும் அருளாளனாக அறியப்பட்டிருக்கும் கடவுளைக்- ‘கடன்காரன்’ என்று கூசாமல் வசைபாட அசுரத் துணிச்சல் பெற்றிருக்க வேண்டும் அல்லவா இந்தச் செட்டிநாட்டுச் சிறுகூடல்பட்டியான்? கடவுள் இவருக்குக் கடன் பட்டிருக்கிறாராம்! ”கடவுள் என் வாழ்வில் கடன்காரன். கவலைகள் தீர்த்தால் கடன் தீரும்” (திரைப்படம் – ‘நீதி’ ,1972, பாடல் – நாளைமுதல் குடிக்கமாட்டேன்) என்கிறாரே? முன்பொருநாள் சுந்தரரைச் சிக்க வைக்கச் சிவபெருமான் சான்று காட்டிய ‘மூல ஓலை’’போல,  இவர் கடவுளையே சிக்கவைக்கும் ‘கடன் பத்திர ஓலை’யேதும் கைவசம் வைத்திருப்பாரோ? செட்டு நாட்டாரல்லவா? கடன் எப்படி ஏற்பட்டது? அந்தக் ‘கடனை வஜா’ (தள்ளுபடி) செய்வதற்கான வழி என்ன? என்றும் கடவுளுக்குக் கன்டிஷன் போடுகிறான் கவிஞன். ‘என் கவலைகளைத் தீர்த்துவிட்டு வந்து நில். ‘அட்மின்’ எனக்குத் தெரியாமல் உன் பெயரில் எழுதிவிட்ட ‘கடன்காரன்’ பட்டியலில் இருந்து உன் பெயரை நீக்கி விடுகிறேன்‘ என்று சலுகை நீட்டுகிறான்.

கடவுள்‘கடன்காரன்’ என்ற பட்டத்தோடு கடந்து சென்றுவிடாமல், கூடுதலாகக், (கொசுறாக), அபாண்டமாக, ‘இறைவன் கொடியவன்’ என்று இரட்டைப் பட்டமாக (Dual Degree) வேறு வாரிவழங்குகிறானே ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ ஆக்கியோன்.”பெண்ணைப் படைத்துக் கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே” என்று (திரைப்படம்: புதிய பறவை, எங்கே நிம்மதி என்ற பாடல்) குற்றச்சாட்டுப் படித்திருப்பதையும் கேட்டீர்களா, நாட்டோரே?

இப்படிச் ‘சாற்றப்பட்ட’ பல்வேறு பிரிவுகளில் கடவுளைக் குற்றவாளியாகவே உறுதி செய்துவிட்டுக் –”கண்களின் தண்டனை காட்சி வழி, காட்சியின் தண்டனை காதல் வழி, காதலின் தண்டனை கடவுள் வழி” என்று எழுதிய கவிஞர், இறுதியில், ”கடவுளைத் தண்டிக்க என்ன வழி?” என்று நம்மையே மாட்டிவிடுவதுபோல் கேட்டுச் சென்றுவிட்டாரே.

நாம் இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்தாலும்,சொல்லவோ, எழுதவோ துணிய மாட்டோம் என்பது கவிஞருக்குத் தெரியும். அதனால் அவரே தண்டனைத் தீர்ப்பும் தனியே எழுதிவிட்டார்.

என்ன தண்டனை கடவுளுக்கு?

ஒரேயொரு கவிதைக்காக –

–         பாலஸ்தீனப் பெண் கவிஞர் டாரின் டட்டூருக்கு வழங்கப்பட்டதுபோல் இரண்டரையாண்டுச் சிறைவாசமா?

–         இலங்கைத் தீவு இளங்கவிஞன் மன்னாரமுதுக்கு (அஹ்னாப் ஜெஸிம்) பரிசளிக்கப்பட்டிருக்கிற, வழக்கை நிலுவையில் வைத்துப், பத்தொன்பது மாதச் சித்திரவதைச் சிறையா?

–         ரஷியக் கவிஞன் ஆர்டெம் கமர்டினுக்குக் கிடைத்திருக்கும் நிறை வதைகளும் ஏழாண்டுச் சிறையுமா?

–         இங்கே நாம் காணவிருக்கும் இன்னொரு கவிஞனுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கையைப் புரட்டக்கூடிய வகைதொகையற்ற தண்டனையா?

இல்லையே!

இதோ கவிஞரளித்த வித்தியாசத் தண்டனை விவரம்:

‘பிறவியிலான்’ கடவுள்  பிறப்பெடுக்க வேண்டும். அப்போதுதான் உயரே இருப்பவனுக்குக் கீழே உழலும் மாந்தர் வாதை யாவும் விளங்கும் என்பதாக,”கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்; அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்” (வானம்பாடி) என்று சாபமிடுவதுபோல் கடுந்தண்டனைத் தீர்ப்பெழுதினான்.

‘தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்’ என்று கூறப்படும் கடவுளுக்குத் தண்டனை கொடுத்துப் பதவியும் இழக்கச் செய்துவிட்டு, குடியிருந்த வீட்டையுங் காலிசெய்யத் தாக்கீது அளித்ததுபோல , ”ஒரு கோவில் இல்லாமல் தெய்வமும் இல்லை. ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை’’ என்றெழுதிவிட்டு. மேலும் கூடுதலாக, ‘தெய்வத்தையும் கோவிலையும் ஏதோ மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மாற்றிவிட்டது போல, ‘’நீ எந்தன் கோவில்; நான் அங்கு தீபம், தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல” (‘இதயகமலம்’) என்று புதிய ‘பிறப்பொக்கும்’ பாடுகிறானே.

கண்ணதாசனுக்குப் பின் வந்து, கண்ணதாசன் போலவே கவியாண்டு, திரையுமாண்டு விரைந்தேகிய நா. முத்துக்குமாரும் கண்ணதாசன் மரபின் தொடர்ச்சியாகவே ‘கடவுள் என்னடா கடவுள்?’ என்ற பாணியிலேயே, ‘’தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்… தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே.’ ’
என்று புதுவிதி செய்தான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ‘பழைய ஏற்பாட்டை’, திரையிசைத் தமிழால் எளிதாக, ஓசையில்லாமல் நெம்பி இடமாற்றம் செய்து புதிய ஏற்பாடாக முன்வைத்த நா. முத்துக்குமார், நற்றமிழ்ச் சாதுரியன்.

நல்லவேளை இந்தக் கவிஞர்களெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்தார்கள்; தப்பித்தார்கள், தண்டனையில்லாமல்! தமிழால் நிந்தித்தாலும் தானேற்றுக் கொள்வேன்; தண்டிப்பேனோ? என்று கடவுளும் இங்கே தமிழ் வளர்ச்சிக்கு தலை நீரூற்றியிருக்கிறார்.



.

Previous Post

Tvk மாநாடு: “விஜய் தன் அரசியல் எதிரியாக முன்னிறுத்தியது யாரை?" – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Next Post

`தம்பி என்பது வேறு; விஜய் ஒன்னு கொள்கையை மாத்தணும், இல்லைன்னா..! – சீமான் விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`தம்பி என்பது வேறு; விஜய் ஒன்னு கொள்கையை மாத்தணும், இல்லைன்னா..! – சீமான் விமர்சனம்

`தம்பி என்பது வேறு; விஜய் ஒன்னு கொள்கையை மாத்தணும், இல்லைன்னா..! - சீமான் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In