ஆந்திரபிரதேசம் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்தில் சொத்து பிரச்னை வெடித்திருக்கிறது.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவி, ஒய்.எஸ்.விஜயம்மா. இவர்களது குழந்தைகள் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஷர்மிளா இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்த நிலையில், அனைவரும் தங்கள் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் இருந்த காலத்தில் தங்கள் குடும்பத்தின் சொத்துகள் பிரிக்கப்படவில்லை என்றும், இப்போது கூட்டுக்குடும்பத்தின் சொத்தாகவே இருப்பதாகவும் விஜயம்மா தெரிவித்துள்ளார். மேலும் YSRCP தலைவர்கள் விஜய்சாய் ரெட்டி மற்றும் VY சுப்பா ரெட்டி உண்மை தெரியாமல் போலியான தகவல்களை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தின் சொத்தான சரஸ்வதி பவுடர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடட்டில் பங்கு தரகாறு குறித்து ஒய்.எஸ்.விஜயம்மா மற்றும் ஒய்.எஸ்.ஷர்மிளாக்கு எதிராக தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT)-ல் மனு தாக்கல் செய்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆரம்பத்தில் பங்குகளை ஷர்மிளா மீதான பாசத்தால் அவருக்கே ஒதுக்க நினைத்ததாகவும் பின்னர் ஷர்மிளாவின் அரசியல் நிலைப்பாடுகளால் அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஜெகனுக்கு பதிலளித்த ஷர்மிளா தான் அரசியலில் ஈடுபட்ட ஆரம்ப காலத்தில் டார்கெட் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஷர்மிளாதனது கடிதத்தில், “அப்பா தொடங்கிய அனைத்தும் குடும்ப தொழில்கள். தனது பேரக் குழந்தைகள் நால்வருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.” என்று கூறியுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துக்களை அபகரிக்க முயலுவதாக அவர்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு, “கேள்விக்குரிய சொத்துகள் அனைத்தும் குடும்ப சொத்துகள். தனிநபர் சொத்துகள் அல்ல” என்று பதிலளித்துள்ளார்.

இந்த பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கும் விதமாக வீட்டுக்கு வீடு வாசல்படி என்ற வகையில், “இது எல்லார் வீட்டிலும் இருக்கும் பிரச்னைதான்” என்று கருத்து தெரிவித்துள்ளார் ஜெகன்.
