மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு ஆளும் மஹாயுதி கூட்டணியிலும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் கூட்டணியிலும் தொகுதி பங்கீடு இன்று வரை முடியாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது. மும்பை ஒர்லி தொகுதியை பா.ஜ.க மாநில பொருளாளர் சாய்னா கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அந்த தொகுதியை விட்டுக்கொடுக்க முடியாது என்று தெரிவித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அத்தொகுதிக்கு ராஜ்ய சபை எம்.பி. மிலிந்த் தியோராவை வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.

இத்தொகுதியில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே போட்டியிடுகிறார். இதனால் சாய்னா என்.சி.க்கு மும்பாதேவி தொகுதியை சிவசேனா(ஷிண்டே) விட்டுக்கொடுத்து இருக்கிறது. இத்தொகுதியில் சாய்னாவை ஏக்நாத் ஷிண்டே வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தன்வேயின் மகள் சஞ்ஜனா ஜாதவ் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரை ஷிண்டே தனது கட்சியின் கன்னாட் தொகுதி வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்.
இத்தொகுதியில் ஏற்கனவே சஞ்ஜனாவின் கணவர் ஹர்ஷ்வர்தன் ஜாதவ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சஞ்ஜனா போட்டியிடுகிறார். இது குறித்து சஞ்ஜனாவிடம் கேட்டபோது, “குடும்ப விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றார். தற்போது சஞ்சனாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ்கின்றனர். பாராமதி தொகுதியில் துணை முதல்வர் அஜித்பவார் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “நான் 57 ஆண்டுகளுக்கு முன்பு வேட்பு மனுத்தாக்கல் செய்ய தாசில்தார் அலுவலகத்திற்கு முதல் முறையாக சென்றேன். அன்று முதல் பாராமதி மக்கள் எனக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். நான் மக்களவை தேர்தலில் குடும்ப உறுப்பினரை நிறுத்தி தவறு செய்தேன். இப்போது அதே தவறை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் தவறை தவிர்க்கவேண்டும். குடும்பத்தில் பிரச்னைகள் இருந்தால் அது நான்கு சுவருக்குள் இருக்கவேண்டும். உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டால் அதனை சரி செய்வது கடினம். எனது தாயார் எனக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் வேட்பாளரை நிறுத்தி இருக்கின்றனர்”என்றார்.
அஜித் பவார் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு சென்ற அரை மணி நேரம் கழித்து அஜித்பவாரின் சகோதரர் மகன் யுகேந்திர பவார் பாராமதி தொகுதியில் மனுத்தாக்கல் செய்தார். அவருடன் சுப்ரியா சுலேயும் வந்திருந்தார். இதனால் இரண்டு பவார்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவை தேர்தலில் அஜித்பவார் மனைவி தோல்வியை தழுவினார். இதனால் இத்தேர்தலில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் அஜித் பவார் இருக்கிறார். இதற்காக அஜித் பவார் தனது இரண்டு மகன்களையும் வேலை செய்வதற்காக களத்தில் இறக்கி இருக்கிறார்.

மும்பை தாராவி தொகுதியை சிவசேனா(ஷிண்டே) இந்திய குடியரசுக்கட்சிக்கு கொடுத்திருக்கிறது. இதனால் அத்தொகுதிக்கு முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீர் வாங்கடே நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் கைது செய்தவர் ஆவார். பீவாண்டி தொகுதியில் பா.ஜ.க முன்னாள் கவுன்சிலர் சந்தோஷ் ஷெட்டியை சிவசேனா(ஷிண்டே) வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.
சிவசேனாவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் வாய்ப்பு கிடைக்காத பா.ஜ.க மூத்த தலைவர்களை ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி வேட்பாளராக அறிவித்து வருகிறார். பா.ஜ.க தலைமையின் நிர்ப்பந்தம் காரணமாக அவர் இது போன்று செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார். ஏற்கனவே பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகனை தனது கட்சி வேட்பாளராக ஷிண்டே அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
