நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, கடந்த 27-ம் தேதி தன் முதல் அரசியல் மாநாட்டையும் நடத்தி முடித்திருக்கிறார். அவரின் மாநாட்டு உரையில், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி, ஃபாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?. இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி.

திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி” எனக் காட்டமாக பேசினார்.
இந்த நிலையில், இன்று, முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “விஜய் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார். அவருக்கு நல்வாழ்துகள். புதிய கட்சியின் கோட்பாடாக, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கட்சி வரும் நாள்களில் அவர்களின் கொள்கையை அறிவிக்கும் என நினைக்கிறேன்.

ஆனால், அவர் காங்கிரஸ் கட்சியின் சில கொள்கைகளை வலியுறுத்தி, பின்பற்றி பேசியிருக்கிறார். அது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய சில கருத்துகள் மகிழ்ச்சியளிக்கவில்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது சாத்தியமா? சாத்தியமில்லையா என்பதை தேர்தல் தான் முடிவு செய்யும். ஒரு காலத்தில் மத்திய அரசில் ஒரு கட்சிதான் ஆட்சி செய்யும் என்றிருந்தது. ஆனால், 1996-க்கு பிறகு அது மாறி, பல கட்சிகள் ஆட்சி செய்கின்றன. அதனால், இதை தேர்தல் தான் முடிவு செய்யும். பாசிசம் பாயாசம் என்றெல்லாம் பேசியது சினிமா வசனம். சினிமா வசனத்தையெல்லாம் கொள்கையாக எடுக்க வேண்டாம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
